Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரட்சியை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு... மாணவர்களே சற்று கவனியுங்கள்!

அனிதா

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிரிழந்த அனிதாவுக்கு நீதி கேட்டும், அவர் (தற்)கொலை செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். நீட்-க்கு எதிரான இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், தமிழக அரசு இந்தப் போராட்டத்தை எப்படி ஒடுக்குவது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்

'மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம்' என மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா. நீட் தேர்வில் தோல்வியடைந்திருந்த அனிதா, திடீரென கடந்த 1- ம் தேதி வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுநாள் வரை நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் என்பது அவ்வளவு பெரிய அளவில் இல்லாமலிருந்தது. ஆனால், அனிதாவின் இறப்புக்குப் பிறகு நீட் தேர்வின் நயவஞ்சகத்தை தமிழக மக்கள் முழுவதுமாக புரிந்துகொண்டனர். இதனால் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கடந்த ஆறு நாள்களாகத் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் - பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'சிறிது நேரம் போராட்டம் செய்துவிட்டு அவர்களாகவே கலைந்துவிடுவார்கள்' என நினைத்தது தமிழக அரசு. ஆனால், ஆறு நாள்களாக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராடி வருவது அரசுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் போராட்டத்தில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருமே பங்கெடுத்துவருகின்றனர். கடந்த 6-ம் தேதி  சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதா சமாதியின் முன்பு கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்தனர். அவர்களைக் காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாக அப்புறப்படுத்தினர். 

போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்

“ஜெயலலிதா சமாதியின் முன்பு நாட்டை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு மட்டுமே தியானம் செய்ய அனுமதி உண்டு. ஆனால் நாட்டையும், தங்கள் உரிமைகளையும் பாதுகாக்க நினைக்கும் மாணவர்களுக்குப் போராட்டம் செய்ய உரிமையில்லை...'' என்று ஆதங்கத்துடன் பொருமினர் அங்கே கூடியிருந்த பொதுமக்கள். 

போராட்டத்தில் பொதுமக்கள்

தீவிரமாகி வரும் மாணவர் போராட்டத்தை எப்படித் தடுப்பது என முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான குழு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் போராட்டத்தைத் தடுக்க சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும், அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்பவர்களைக் கைதுசெய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. கட்சித் தலைவர்கள் நடத்தும் போராட்டத்தைத் தவிர மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திவரும் போராட்டங்களை உடனடியாகக் கலைத்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இவ்விஷயத்தில் மட்டும் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமிழகக் காவல்துறை கைதுசெய்து விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்களை கலைக்கும் காவலர்கள்

“இந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்கு அரசு எந்த மாதிரியான நடவடிக்கையையும் செய்யத் துணியும்! அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு... 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களிடையே சில சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர்' என்று காரணம் சொல்லி போராட்டக் களத்தையே வன்முறைக் காடாக்கியது தமிழகக் அரசு.  இதுமட்டுமா.... கலவரம் நடத்த ஒரு காரணம் வேண்டும் என்று நினைத்த காவலர்கள் தாங்களே பல வாகனங்கள் மற்றும் குடிசைகளுக்கு தீவைத்துக்கொண்டு அந்தப் பழியை போராட்டக்காரர்கள் மீது சுமத்தினார்கள். அதேபோல் இந்தப் போராட்டத்தையும் திசைமாற்ற தமிழக அரசும், காவல்துறையும் என்ன வேண்டுமானாலும் செய்யும். ஏனென்றால், தமிழகத்தில் நடப்பது தமிழர்களின் ஆட்சியல்ல...

போராட்டக்காரர்களை கலைக்கும் காவலர்கள்

'நமது பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான் இவர்கள் போராடுகிறார்கள்' என்ற எண்ணமெல்லாம் காவலர்களுக்கு இருக்காது. என்றோ கலைக்கப்படும் போராட்டத்துக்கு இன்றே போலியான காரணத்தை காவலர்கள் உருவாக்கி வைத்திருப்பார்கள்'' என்று போராட்டக்காரர்கள் குமுறுகிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close