Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம்!

தூத்துக்குடியில், அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை ஜீர்ணோதாரண கும்பிஷேகம் நடைபெற்றது. 

sivankovil kumpapisegam

திருமந்திர நகராம் தூத்துக்குடியில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி நடந்துவருகிறது. இதையொட்டி யாகசாலையில் 100 யாக குண்டங்களுடன் உத்தமபட்ச யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று அதிகாலை 3.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்பங்கள் புறப்பாடும், ராஜகோபுரம், விமானங்களுக்கு ஏக காலத்தில் மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பக்தர்களின் ’’ஹர ஹர... சிவசிவா..’’  கோஷம் முழங்க, ஜீர்ணோதாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இன்று மாலை 7 மணிக்கு சுவாமி – அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா வருதலும் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தில் 250 சிவாச்சாரியார்கள், திருமறை ஓதுவார்கள், வேதவிற்பன்னர்கள் பஞ்சபூதத் தலங்களிலிருந்தும் நவசக்தி பீடங்களிலிருந்தும் அறுபடை வீடுகளிலிருந்தும் பங்கேற்றனர்.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று ஒருநாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கு சிவன்கோயில் அருகிலேயே உள்ள டி.ஏ திருமண மண்டபம், வைபவ வேளாளர் மண்டபம் மற்றும் எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலேயே பிரசித்திபெற்ற தலம் என்பதால், தூத்துக்குடி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செல்வவிநாயகர் திருக்கோயிலிலும் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close