Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பிற்போக்கான ஆண்களும் சமூக ஊடகங்களில் நிரம்பிக் கிடக்கிறார்கள்!’’ - மித்தாலி ராஜ் ட்ரோல் பற்றி மாலினி ஜீவரத்னம் #MithaliRaj

மித்தாலி ராஜ்

“நீங்கள் இப்படி உடை அணிவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை!” 

“நீங்கள் ஒன்றும் நடிகையல்ல; கிரிக்கெட் வீராங்கனை. ஏன் இவ்வளவு கிளாமரா இருக்கிறீர்கள்?”

“நீங்கள் ஒரு வழிகாட்டி; இப்படியெல்லாம் உடை அணியக் கூடாது!” 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்  ட்விட்டரில் பதிவிட்ட படத்தால் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறார். காரணம், அவர் அணிந்திருந்த உடைதான். 

மாலினி ஜீவரத்னம்

சமீபத்தில், தனது நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மித்தாலி ராஜ். அதில் அவர் அணிந்திருத்த ஆடையை ட்ரோல் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். பிரபலமானவர்கள் அணிந்திருக்கும் ஆடையை வைத்து இந்திய வீராங்கனைகள் ட்ரோல் செய்யப்படுவது முதன்முறையல்ல. சானியா மிர்சா குட்டை ஆடை அணிந்துகொண்டு டென்னிஸ் ஆடுவதை எதிர்த்தது முதல் மித்தாலி ராஜின் உடையில் வியர்வைப் படிந்திருந்தது வரை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்துவருகின்றனர். பிற்போக்கு எண்ணம் கொண்ட சிலர்,  ஒருவர் அணியும் உடையைவைத்து அவர்களின் நடத்தையையும் தொடர்புப்படுத்திப் பேசுவதையும் தொடர்ச்சியாகச் செய்துவருகின்றனர்.  இதுகுறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிவரும் ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்னத்திடம் பேசினோம். 

”இது நம் சமூகத்தில் காலங்காலமாக இருக்கும் மனநிலைதான். நாம் ரோட்டில் போகும்போது ஆண்கள் பலர் கிண்டல் பண்ணுவாங்க. அதுவே சமூக ஊடகங்களிலும் நடக்குது. நம் நாட்டில் இருக்கிற பிற்போக்குவாதிகள் போலவே, சமூக ஊடகங்களில் பலர் இருக்கின்றனர்.

அவ்வளவு ஏன்? கிராமப்புறங்களில் பெண்களின் கபடி போட்டி என்றால், ஆண்கள் கூட்டம் கூட்டமாக பார்க்க வருவார்கள். ஷார்ட்ஸ் அணிந்துவரும் பெண்களைப் பார்த்து ரசிக்கவும் கேலி செய்ய வருபவர்களும் இதில் அடங்குவர். சினிமா சார்ந்து பணிபுரியும் பெண்ணாக, நான் தினமும் பல ஆண்களைக் கடந்துசெல்கிறேன். ஒவ்வோர் ஆணும் என்னைக் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே இருந்தால், நான் எப்படி வேலைச் செய்யமுடியும்? 'இதைக் கண்டுகொள்ளாமல் அமைதியா போய்டுங்க'னு சிலர் சொல்வாங்க. எத்தனை பேரை அப்படிக் கடந்துகொண்டே இருக்கிறது?

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'வெளிநாட்டில் பெண்களைப் பாலியல் வன்முறை செய்வதை எதிர்த்துப் பெண்கள் நிர்வாணப் போராட்டம் பண்ணினாங்க'னு சொன்னேன். அதுக்கு அவர், 'அடடே! அதைப் பார்க்க மிஸ் பண்ணிட்டேனே'னு கேலியாகச் சொன்னார். ஆக, ஆண்கள் ஒரு பக்கம் இந்த வன்முறைகளை ரசித்துக்கொண்டே மறுபக்கம் ஆதரவுக் குரல் கொடுக்கிறார்கள். இந்த மனநிலையின் பிரதிபலிப்புதான், பெண்களை உடை சார்ந்து ட்ரோல் செய்யும் கலாசாரம். 

அதேமாதிரி, சாரா ஆப்மூலம் 'நீங்க லெஸ்பியனா? நீங்க திருநங்கையா? உங்களுக்கு ஆண்களைப் பிடிக்காதா?'னு கேள்வி கேட்கறாங்க. இன்னும் வக்கிரமான கேள்விகள்கூட வந்திருக்கு. நான் எல்லாத்துக்கும் பதிலடி கொடுத்துட்டுதான் இருக்கேன். பெண்கள் கிரிக்கெட் சமீப காலமாகத்தான் பிரபலமாகி வருது. அதில் சாதனை புரிந்துவரும் மித்தாலி ராஜை, தொடர்ந்து ட்ரோல் செய்யும் மனநிலை ரொம்ப மோசமானது. 'பெண் என்றால், இப்படித்தான் இருக்கணும்' என்ற வட்டத்துக்குள் அடக்கும் அடக்குமுறையின் வக்கிரத்தின் வெளிப்பாடுதான் இது. இதுக்கெலாம் அஞ்சாமல் அவங்க சரியான பதிலடி கொடுக்கணும்” என்கிறார் மாலினி ஆவேசமாக.

பெண்களை நேசிக்கவும் அவர்கள் தயக்கமின்றி சுதந்திரமாக உலவவும், கருத்துகளைப் பகிரவும் இந்த உலகம் ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close