Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவள்ளுவர் சிலைக்கு பாலம் கானல் நீர் திட்டமா?

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அப்படி வருபவர்கள் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவற்றை பார்க்க தவறுவது இல்லை. படகு மூலமாக கடலில் திருவள்ளுவர் சிலைக்கோ விவேகானந்தர் மண்டபத்திற்கோ தினமும் செல்ல முடியாத சூழல் அடிக்கடி உருவாகிறது. இதற்கு கடல் சீற்றம், கடல் உள் வாங்குதல் போன்றவை காரணங்களாக அமைகின்றன. மேலும், விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று பார்த்த பின் மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் சிலையை பார்க்க செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான பயணிகள் எதாவது ஒரு இடத்திற்கு மட்டுமே சென்று திரும்புகின்றனர்.

 

இந்தநிலையில், கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இன்னும் பல வசதிகளை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக கடல் சீற்றத்தை காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கவே கூடுதல் நேரம் ஆகிறது.
இதை தவிர்க்க விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, மத்திய சுற்றுலா துறை மண்டல அதிகாரி சமது தலைமையிலான குழுவினர், குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து கன்னியாகுமரியில் செய்யப்பட வேண்டிய சுற்றுலா பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.


அதன்படி கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்கும் திட்ட மதிப்பீடும் மற்றும் திட்ட வரைபடமும், வடிவமைக்கும் பணியும் நடந்தது. ரூபாய். 15 கோடி செலவில் நடை பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாலம் 95 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இந்த நடைபாலத்துக்காக 8 ராட்சத தூண்கள் கடலுக்குள் அமைத்து இந்த பாலம் அமைக்கப்படுகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் எந்த நேரத்திலும் தடை இன்றி திருவள்ளுவர் சிலையை சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்கப்பட்ட உடன் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு நடந்தே சென்று பார்க்கலாம். இதன் மூலம் படகுக்கு எரிபொருளும் சிக்கனமாகும்.சுற்றுலா பயணிகளும் திருப்தி அடைவார்கள்.கரையில் இருந்து பார்க்கும் போது கடலுக்குள் தனியாக ஒரு பாலம் அமைந்திருப்பது  போன்று வித்தியாசமான உணர்வை தரும். ஆனால் இன்னும் பாலம் குறித்த எந்த வித  பணிகளும் தொடங்கப்பட வில்லை. ஆய்வு பணிகள் நடந்து ஓராண்டு முடிந்தும் இன்னும் எந்த பணிகள் தொடங்கப்படாததால் இதுவும் கானல் நீர் திட்டமா? என்று சுற்றுலா பயணிகளும், குமரிமாவட்ட மக்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close