Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலைகிராம மக்களுடன் ஒருவாரம்... மாணவர்கள் நடத்திய பொது விழிப்பு உணர்வு முகாம்!

இயற்கை

கர்ப்புறங்களில் வாழும் நம்மால் செல்போன், பைக், கார் இல்லாமல் ஒரு மணிநேரம் கூட இருக்க முடியாது. அந்த அளவுக்கு நாம் சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டோம். உண்மையான சந்தோஷத்தைத் தேடும் மனிதர்கள் யாரும் செல்போன், பைக், கார் போன்ற சொகுசு வசதிகளைத் தேடுவதில்லை. அவர்கள் தேடுவதெல்லாம் காடு, மரங்கள், விலங்குகள், பறவைகள், பசுமையான சூழல் போன்றவற்றைத்தான். 'அப்படிப்பட்ட மனிதர்களும் தற்போதைய காலத்தில் இருக்கிறார்களா என்ன?' என்றால் நிச்சயம் இருக்கிறார்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாத மலை கிராம மக்கள்தான் அவர்கள். 

மாணவர்களின் விழிப்பு உணர்வு

அதுபோன்ற மலை கிராம மக்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி, "உங்களால் எப்படி விஞ்ஞான உலகின் சொகுசான வசதிகளை அனுபவிக்காமல் சந்தோசமாக வாழமுடிகிறது?" என்பதுதான். அதற்கு அவர்கள் நம்மைப் பார்த்து பதிலுக்குக் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். "உங்களால் எப்படி நவீன உலகின் சொகுசான வசதிகளுக்கு மத்தியில் சந்தோஷமாக வாழமுடிகிறது?" என்பதே. அவர்களின் வாழ்க்கை முறையோடு இணைந்து பயணிக்காதவரை நம்மால் அவர்களைப் பற்றியும், அவர்களின் உணர்வுகளையும் தெரிந்துகொள்ள முடியாது. அப்படிப்பட்ட மக்களைப்பற்றி, அவர்களின் வாழ்வாதாரம் பற்றி, நம்மில் எத்தனைபேர் அறிந்து வைத்துள்ளோம்? அதுபோன்ற மக்களின் வாழ்க்கை, நம்மைவிடவும் எவ்வளவு தொலைவுக்கு தள்ளி இருக்கிறது? அல்லது நாம் அவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காகவும், மலைகிராம மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 'மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்' கல்லூரி மாணவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி என்ற மலைகிராமத்துக்கு சென்று வந்துள்ளனர். இது வெறும் பயணம் மட்டுமல்ல... ஆறு நாட்கள் அந்த மக்களோடு ஒன்றாக வாழ்ந்து, அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன? அதை எப்படி தீர்ப்பது போன்ற பல சிறப்பு விழிப்பு உணர்வு பயிற்சிகளையும் கொடுத்து வந்திருக்கின்றனர் அவர்கள்.

மாணவர்களின் விழிப்பு உணர்வு

அங்கு சென்ற மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் செண்பகம், தங்களின் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். "அடிப்படை வசதிகள் இல்லாத மலைகிராம மக்களுக்கு, அங்கிருக்கும் பிரச்னைகள் என்னவென்பதைக் கண்டறிந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தணும்னு முடிவு பண்ணினோம். அதனாலதான் சத்தியமங்கலம் மலைப்பகுதியில, மலைக்குமேல இருக்கிற 'குன்றி' என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஊரை நாங்கள் ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பதற்கு காரணம் இருக்கு. இங்க இருக்குற பிள்ளைகளுக்கு செண்பகம் சரியான படிப்பு வசதிகள் கிடையாது. அதனால், பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் இங்குள்ள பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செஞ்சு வச்சுடுறாங்க. இந்த கிராமத்தில் சரியான சாலை வசதிகள் கிடையாது. 900 குடும்பங்கள் இருக்குற இந்த கிராமத்தில் செல்போன்னா என்னன்னுகூட தெரியாது. ஒரு லேண்ட்லைன் போன் கூட  கிடையாது.  ஒருசில கம்பியில்லா தொலைபேசியான வில்போன் தான் இந்தக் கிராமத்தில இருக்கு... இன்டர்நெட், கம்ப்யூட்டர், தெருவிளக்குகள் எதுவுமே கிடையாது. இங்க மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் இல்லாத காரணத்தினால் இங்க இருக்கிற குழந்தைகள் தொடக்கக் கல்வியைத் தாண்டி படிக்கறது இல்ல. அதுபோல நோய்கள் பத்தின விழிப்பு உணர்வும் மிகமிகக் குறைவு. அதனால்தான், இந்த ஊருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்க 53 பேர் போனோம். எங்ககூட எங்க கல்லூரி பேராசிரியர்களான  சத்தியமூர்த்தி மற்றும் லெட்சுமி ஆகியோர் கைடு பண்ண வந்தாங்க" என்றவர் மேலும் தொடர்ந்து பேசினார். 

"இவ்வளவு வசதி குறைபாடுகள் இருந்தாலும் அங்குள்ள மக்கள் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. போன், வாகனங்கள் இல்லை அப்படிங்கிற கவலையே அவங்களுக்கு இல்லை. ஊர் தலைவர் என்ன சொல்றாரோ, அதுதான் அந்த மக்களின் வேதவாக்கு. எங்களை அவங்க வீட்டுப் பிள்ளைகள் போன்று அன்போட பாத்துக்கிட்டாங்க. எங்களோட தேவை எல்லாத்தையும் அவங்களே நிவர்த்தி பண்ணிவச்சாங்க. நாங்க அந்த கிராமத்தில் இருந்த ஆறு நாட்களும் சமூகப் பொருளாதாரம், கல்வியின் அவசியம், குழந்தை திருமணம், மதுவின் தீமை, டெங்கு, கேன்சர், விவசாயம் பற்றிய முகாம்களும் விழிப்பு உணர்வு முகாம்களும் நடத்தினோம். இவை எல்லாவற்றையும் தெருக்கூத்து, பறையாட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், பாடல் எழுதிப் பாடுவது, ஆடுவது போன்ற நாட்டுப்புறக் கலைகளின் மூலம் அவர்களுக்கு பயிற்றுவித்தோம். அவர்களும் நாங்கள் நடத்திய அத்தனை விழிப்பு உணர்வு முகாம்களிலும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகிட்டாங்க.

பொம்மலாட்டம்

அதுமட்டுமல்லாமல், கிராம மாணவர்களுக்காக 'கிராம பாராளுமன்றம்' செயல்படுத்தியுள்ளோம். அதன் வேலை என்னவென்றால், அரசியலைப் பற்றி அவர்கள் தெரிந்து கொண்டு, வாரம் ஒருமுறை அவர்களுக்குள்ளாகவே கலந்துபேசி அந்த ஊருக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்து மக்களிடம் சொல்லுவார்கள். அதை ஊரின் நல்லதுக்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்துவார்கள்.  ஒருவாரம் போனதே தெரியல.. அவ்வளவு ஏன், இந்த ஒரு வாரத்துல நாங்க எல்லோருமே செல்போன், லேப்டாப் எல்லாத்தையுமே மறந்துட்டோம். இதுபோல ஒவ்வொரு மலை கிராமத்துக்கும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் விழிப்பு உணர்வுப் பயணம் மேற்கொள்ளணும். அவங்களோட வாழ்வாதாரத்தையும், அவங்களுக்கு என்னென்ன பிரச்னைகள் இருக்குன்னும் தெரிஞ்சிக்கிட்டு அதை சரிசெய்யப் பாடுபடணும்" என்றார் பூரிப்புடன்.

கல்லூரி மாணவர்கள்

இதுபற்றி பேராசிரியர் சத்தியமூர்த்தி நம்மிடம், "குன்றி கிராமம் மட்டுமில்ல...அந்தக் கிராமத்தைச் சுற்றி இருக்கிற பெரிய குன்றி, அணில் நத்தம், குஞ்சம்பாளையம், மாகாளித்தொட்டி போன்ற கிராமங்களிலும் மாணவர்களுடைய விழிப்பு உணர்வு முகாம்களும், பதாகைகள் பேராசிரியர் சத்தியமூர்த்திஏந்திய ஊர்வலங்களும் நடைபெற்றன. மேலும் கிராம மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் எங்கள் கல்லூரி மாணவர்களால் சேர்க்கப்பட்ட குறிப்பிட்ட தொகை மற்றும் கிராமத்திற்குத் தேவையான உபகரணங்களும் அந்த மக்களிடம் வழங்கப்பட்டது. 

இன்னமும் இந்த கிராமங்களில் செல்போன் பயன்படுத்துவதில்லை என்பது ஒருபுறம் சந்தோஷமான விஷயம் என்றாலும், மறுபுறம் தகவல் தொடர்பு வசதிகள் போதிய அளவு அந்த கிராமங்களில் கிடைக்கவில்லை என்பது சற்று வருத்தமளிக்கக்கூடிய விஷயம்தான். குன்றி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சொல்லும் குறைகள் என்றால், அவர்களின் கிராமத்துக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை, தெருவிளக்கு, பேருந்து சேவை மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதுதான். தொடர்ந்து இதுபோன்ற கிராமங்களுக்கு எங்களின் விழிப்பு உணர்வு பயணம் தொடரும்" என்றவர், மேலும், "சொல்ல மறந்துட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எங்கள் மாணவர்கள் அந்தக் கிராம மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்ப்படுத்தியதைவிட அந்த மக்களிடமிருந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றதே அதிகம்" என்றார் மிளிர்ந்த கண்களுடன்.

இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் மக்கள் என்றுமே சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு இதுபோன்ற விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தப்படும் போது, அவர்களின் வாழ்க்கைமுறை மேம்படும் என்பதில் சந்தேகமில்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close