Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'போக்குவரத்துத் துறையில் 16,000 கோடி இழப்பு' - அதிரவைக்கும் ராமதாஸ்!

போக்குவரத்துத் துறையில் 16,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.

ராமதாஸ்

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள்குறித்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், மொத்தமுள்ள 51 பொதுத்துறை நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு கடுமையான இழப்பைச் சந்தித்துவருகின்றன. குறிப்பாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு மிகவும் அதிகமாகும். இதனால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழக அரசின் நிதி அமைச்சகம் சார்பில், பொதுத்துறை நிறுவனங்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன. தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 2015-16-ம் ஆண்டில் மட்டும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2602.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.499.67 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. அடுத்ததாக, கோவை அரசுப் போக்குவரத்துக்கழகம் ரூ.401 கோடியும், கும்பகோணம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.388.61 கோடியும், நெல்லைக் கோட்டம் ரூ.340.60 கோடியும், விழுப்புரம் கோட்டம் ரூ.304.92 கோடியும், மற்ற போக்குவரத்துக் கழகங்கள் ரூ.300 கோடிக்கும் குறைவாகவும் இழப்பைச் சந்தித்துள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இழப்பில்தான் இயங்கிவருகின்றன. பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதன் பயனாக, கடந்த 2004-05 -ம் ஆண்டில் மட்டும் 6 போக்குவரத்துக் கழகங்கள் ரூ.39.91 கோடி லாபம் ஈட்டின. ஆனால், அதே ஆண்டில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.12.36 கோடி இழப்பை எதிர்கொண்டது. அதன்பின் 2005-06-ம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ச்சியாக இழப்பில் இயங்கிவருகின்றன. 2008,09-ம் ஆண்டு வரை ரூ.1000 கோடிக்கும் குறைவாக இருந்துவந்த ஆண்டு இழப்பு, இப்போது ரூ.3000 கோடியைத் தாண்டிவிட்டது. 2011-12-ம் ஆண்டு ,அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த  ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.8853.74 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

போக்குவரத்துத் துறை

இதையும் சேர்த்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு ரூ.16,145.94 கோடியாக உயர்ந்திருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு,  இந்த அளவுக்கு அதிகரித்ததற்குக் காரணம், அரசின் நிர்வாகத் திறமையின்மைதானே தவிர வேறொன்றுமில்லை. பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாததுதான் காரணம் என்று அதி மேதாவித்தனமான விளக்கம் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது. இது, போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் ஊழலை அதிகரிப்பதற்குத்தான் உதவுமே தவிர, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த வகையிலும் உதவாது.

உதாரணமாக, கடந்த 2011-ம் ஆண்டு நவம்பரில், ரூ.2100 கோடி அளவுக்கு ப்பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், அந்த ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு கட்டுப்படுத்தப்படும் என்றும், அதற்கு அடுத்த ஆண்டு முதல் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்கும் என்றும்  தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், 2010-11 -ம் ஆண்டில், ரூ.1535 கோடியாக இருந்த போக்குவரத்துக் கழகங்களின் இழப்பு குறைவதற்குப் பதிலாக, ரூ.1791.66 கோடியாக அதிகரித்தது. அதற்கு அடுத்த ஆண்டில், அதாவது 2012-13-ம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தில் இயங்குவதற்குப் பதிலாக ரூ.856.53 கோடி இழப்பைச் சந்தித்தன. அதற்கு அடுத்த ஆண்டில், ரூ.1266 கோடியாக இழப்பு அதிகரித்தது. ரூ.2100 கோடிக்குப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பில் இயங்கினால், அதற்கான காரணம் என்ன? என்பதை உணரலாம்.

அதுமட்டுமன்றி, 2013-14-ம் ஆண்டில் ரூ.1266 கோடியாக இருந்த இழப்பு, அதற்கு அடுத்த ஆண்டில்  இரு மடங்காக, அதாவது ரூ.2337.09 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், போக்குவரத்துக் கழகங்களில் நடக்கும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும்தான். இன்றைய நிலவரப்படி, போக்குவரத்துக் கழகங்களின் மொத்த இழப்பு ரூ.20,000 கோடியையும் ஆண்டு இழப்பு ரூ.4,000 கோடியையும் தாண்டிவிட்டது. இதைச் சமாளிப்பதற்காக வாங்கிய கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.850 கோடியை போக்குவரத்துக் கழகங்கள் வட்டியாகக் கட்டி வருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நலிவடைந்து, அதன் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய உரிமைகளைக்கூட வழங்க முடியாமல் தடுமாறுவதற்குக் காரணம், அவற்றில் நடைபெறும் மோசடிகள் சிறிதளவு கூட களையப்படாதது தான். சீரழிந்துவரும் போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்கும் எண்ணம் பினாமி தமிழக அரசுக்கு இல்லை" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close