Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'புத்தகத் திருவிழா வேண்டும்!' - கோரிக்கை விடுக்கும் த.மு.எ.க.ச!

'நெல்லையில் புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும்' என்று மாவட்ட நிர்வாகத்துக்கு த.மு.எ.க.ச நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லையில், கடந்த 2013 மற்றும் 2014 ஆகிய வருடங்களில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று, தேவையான புத்தகங்களை வாங்கிச்சென்றனர். நாள்தோறும் படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு விருந்தாக அமைந்தன.

புத்தகத் திருவிழா கோரிக்கை

அதன் பின்னர், நெல்லையில் புத்தகத் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்து மீண்டும் புத்தகக் காட்சியை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளரான இரா.நாறும்பூநாதன் தலைமையில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் எழுத்தாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து மனு அளித்தனர்.

அதில், ’’நெல்லை மாவட்டம் விடுதலைப் போராட்ட வீரர்கள், தியாகிகள், இலக்கிய ஆசான்கள், இசைவாணர்களைப் பெற்றெடுத்த பூமி. இலக்கியத்துக்காக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதாளர்களை அதிகம் பெற்ற மாவட்டம். ரா.பி.சேதுப்பிள்ளை, மீ.ப.சோமு, வல்லிக்கண்ணன், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சிவசங்கரன், சு.சமுத்திரம், தோப்பில் முகம்மதுமீரான், ஜோ.டி.குரூஸ், ஆ.மாதவன், வண்ணதாசன் என சாகித்ய அகாடமி விருதாளர்களின் பெரும் பட்டியலே இருக்கிறது.

குறவஞ்சி இலக்கியத்தில் சிறந்த 'குற்றாலக் குறவஞ்சி', பள்ளு இலக்கியத்தின் சிறந்த 'முக்கூடற்பள்ளு', பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் சிறந்த 'மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்', சிந்து இலக்கியத்தின் சிறந்த 'காவடிச் சிந்து' எனத் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய படைப்பாளிகள், அறிஞர்களைக்கொண்ட மாவட்டம் இது. இத்தகைய பெருமைக்குரிய மாவட்டத்தில், கடந்த சில வருடங்களாகப் புத்தகத் திருவிழா நடத்தப்படவில்லை. 

இந்த ஆண்டு மாணவர்கள், பொதுமக்கள் பயனடையும் வகையில், புத்தகக் கண்காட்சியை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என பாரதி நினைவு நாளான இன்று கோரிக்கை விடுக்கிறோம். நெல்லையில் 30-க்கும் அதிகமான இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் என்கிற அமைப்பு உள்ளது. அதனால், இங்கு சிறப்பான வகையில் புத்தகக் கண்காட்சியை நடத்த இயலும்’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இது தொடர்பாகப் பரிசீலித்து முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close