Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''ஸ்டாலின் கிடுக்குப்பிடி... மும்பை கிளம்பிய ஆளுநர்..!'' எடப்பாடி பழனிசாமி அரசு தப்புமா..?

ஸ்டாலின்

''எடப்பாடி அரசுக்குப்  பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். அதுவும் ஒருவாரத்துக்குள் அதைச் செய்யவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம். இந்தப் பிரச்னையில் இனி ஆளுநரை சந்திக்கும் எண்ணம் இல்லை'' என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறிய நிலையில் சென்னையில் 6 நாள் தங்கி இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை மும்பை பறந்து சென்றுவிட்டார். எனவே, அடுத்தடுத்த அதிரடிகளால் எடப்பாடி அரசு இன்னும் எவ்வளவு காலத்துக்கு தப்பிப் பிழைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அ.தி.மு.க.-வில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை அடைந்ததால், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் கடந்த மாதம் 22-ம் தேதியும், மேலும் மூன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் செப்டம்பர் 6-ம் தேதியும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துத் தனித்தனியே கடிதம் கொடுத்தனர்.

தி.மு.க மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் 26.8.2017 அன்று ஆளுநரிடம், தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தனர். தவிர, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் டெல்லியில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து, தமிழகத்தில் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்று மனுக் கொடுத்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை 10-ம் தேதி அன்று  சந்தித்து மனு கொடுத்தனர்.

அப்போது, மு.க.ஸ்டாலின், ''எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். உங்களுடைய பதில் நடவடிக்கைக்காக ஒருவாரம் காத்திருப்போம்'' என்று ஆளுநரிடம் தெரிவித்து, அதற்கான மனுவையும் அளித்தார். 

அதில், ''ஆளும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை நேரடியாகச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்து, முதலமைச்சர் மீது தங்களுடைய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியதின் மூலம் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.‬ ஏற்கெனவே தி.மு.க, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 98 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். சட்டப்பேரவையில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போதுள்ள அ.தி.மு.க அரசு, சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது, ஆனால், ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது (தி.மு.க: 89; காங்கிரஸ்: 8; ஐயூஎம்எல்: 1; மற்றும் அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்: 21) எனவே, தற்போதைய முதல்வர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

உச்சநீதிமன்றம்

‪எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வில், "அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லை அல்லது அரசுக்கு ஆதரவு அளிக்கும் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது எனும் உண்மைகள் தெளிவாக தெரியும் நிலையில், சட்டப்பேரவையை கூட்டுவதற்கு, அந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைகளை ஆளுநர் கேட்கக்கூடாது. அதற்குப் பதில், அந்த அமைச்சரவையை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.

‪அடுத்ததாக 'நபாம் ரெபியா & பமாங் ஃபெலிக்ஸ் வெர்சஸ் துணை சபாநாயகர்' என்ற அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'ஒரு அரசுக்குப் பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளிக்கும் ஆதரவு விவாதத்துக்குள்ளாகும்போது, சட்டப்பேரவையை கூட்டவோ, ஒத்திவைக்கவோ, கலைக்கவோ முதலமைச்சரும், அவரது அமைச்சரவையும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் உரிமையை இழக்கின்றனர். ஆட்சியில் உள்ள அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நம்புவதற்கான காரணங்கள் இருக்குமாயின், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை விவகாரத்துக்கு முடிவுகாணும் நடவடிக்கைகளை எடுக்க ஆளுநருக்கு முழு உரிமையுண்டு' என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தீர்ப்புகளின்படியும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளின்படியும் ஜனநாயக அடிப்படையிலும், உடனடியாக எந்தவிதத் தாமதமும் இல்லாமல் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. இந்த பெரும்பான்மையில்லாத அரசு இனியும் தொடர தாங்கள் அனுமதித்தால், அது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கங்களுக்கும் அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துகளுக்கும், உச்ச நீதிமன்றம் இதுபோன்ற விஷயங்களில் இதுவரை அளித்துள்ள தீர்ப்புகளுக்கும் எதிரானதாகும்.

இதுவரையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடாமல் தவிர்ப்பது, தங்களுடைய செயல்பாடுகளில் பாரபட்சமிருப்பதாக வலுவான சந்தேகம் எழுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களால், மக்களுக்காக, மக்களின் ஆட்சி என்பதைத்தான் குறிப்பிடுகிறது என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.‬ எனவே, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டு, இனியும் எவ்விதத் தாமதமுமின்றி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 

எடப்பாடி வித்யாசாகர் ராவ் பன்னீர்செல்வம்

ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ''இன்னும் ஒரு வாரத்துக்குள் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டியை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். இந்தக் காலக்கெடுவுக்குள் சட்டசபையைக் கூட்டவில்லை என்றால் நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்று கூறியிருக்கிறோம். ஆளுநரிடம் மனு அளிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம்'' என்றார்.

சென்னை வந்திருந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆறு நாள்  பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 11 மணிக்கு மும்பை சென்றார். தி.மு.க தரப்பில் ஒரு வாரம் கெடு விதித்துள்ளதோடு, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் செயல்படவிலை என்றால் பாரபட்சத்தோடு செயல்படுவதாகக் கருத நேரிடும் என்றும் ஆளுநருக்கு எச்சரித்துள்ளனர். எனவே, இந்தப் பிரச்னையில் ஓர் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இப்படி நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சியைக் கைக்குள் கொண்டு வர பொதுக்குழுவை நாளை கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தடுத்த அதிரடிகளை எதிர்நோக்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close