Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“இந்த உலகில் அனைவருமே மாடல்கள்தான்!” - கண்களைக் கட்டிக்கொண்டு ஓர் அழகு சாதனை

சாதனை இலங்கேஸ்வரி

“நீங்கள் செய்யும் வேலை மீது நேர்மையும் பற்றும் இருந்தால், அது அனைத்து உயரங்களுக்கும் உங்களை அழைத்துச்செல்லும்'' என உற்சாகமாகப் பேசுகிறார் இலங்கேஸ்வரி. கண்களைக் கட்டிக்கொண்டு இரண்டே முக்கால் மணி நேரத்தில் 50 விதமான சிகையலங்காரங்களை 50 பேருக்குச் செய்து, இண்டியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் படைத்திருக்கும் பெண். செப்டம்பர் 07 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இந்தச் சாதனையை நிகழ்த்தப்பட்டது. இதில், குறிப்பிடவேண்டிய சிறப்பம்சம், அவரிடம் சிகையலங்காரம் செய்துகொண்டவர்களில் பலர் மாற்றுத்திறனாளிகள். தன் சாதனையில் சேவை குணத்தையும் பங்கேற்றவர்களுக்குள் தன்னம்பிக்கையையும் அளித்திருக்கிறார் இலங்கேஸ்வரி. கண்களைக் கட்டிக்கொண்டு அவர் செய்த ஒவ்வொரு சிகைலயங்காரத்துக்கும் எழுந்த கைதட்டல் உற்சாகப் பட்டாசாக வெடித்தது. சாதனைக்குப் பிறகு இலங்கேஸ்வரியுடன் சற்று நேரம்... 

''என்னைப் பொருத்தவரைக்கும் இந்த உலகத்தில் இருக்கிற எல்லோருமே மாடல்கள்தான். இவங்கதான் மாடல் என மாடலிங்கை தொழிலாகச் செய்யும் சிலரை மட்டும் சொல்றதுல உடன்பாடில்லை. இதை நிரூபிக்கவே மாற்றுத்திறனாளிகளுக்குச் சிகை அலங்காரம் செஞ்சு அவங்களையும் இந்தச் சாதனையில் பங்கெடுக்க வெச்சேன். நான் தொழில் சார்ந்த எல்லா விஷயங்களையும் மூளைக்குள் படங்களாக வெச்சிருக்கேன். மூளை நினைக்கிறதை கையால் செய்ய ஆரம்பிச்சுடுவேன். இதுக்கு கண்கள் திறந்திருக்கணும்னு அவசியமில்லை. இந்தத் துறையில் எனக்கு இருக்கும் 15 வருட அனுபவமே இப்படிச் செய்யும் தன்னம்பிக்கையைக் கொடுத்துச்சு'' எனப் புன்னகைக்கும் இலங்கேஸ்வரி, தனது அடுத்த சாதனைக்கான முயற்சியிலும் இறங்கிவிட்டார். 

சாதனை இலங்கேஸ்வரி

“கண்களைக் கட்டிக்கொண்டு முடி வெட்டுவதற்கான பயிற்சி எடுத்துட்டு இருகேன். இதுக்கு முன்னாடி கண்களைக் கட்டிக்கொண்டே நீளமான சடையைப் பின்னி, தமிழ்நாடு அளவில் சாதனைப் படைச்சேன். இந்தியாவின் சிறந்த பத்து ஒப்பனையாளர்களில் நானும் ஒருவர் எனப் பெயர் வாங்கியிருகேன். செய்யும் தொழிலை நேசிச்சு ரசிச்சு செய்தால் எல்லாம் ஈஸிதான். என்னோடு இருக்கிறவங்களின் ஒத்துவைப்பும் ஊக்கமும்தான் இதுக்கு முக்கிய காரணம்.'' என அடக்கமாகப் புன்னகைக்கிறார் இலங்கேஸ்வரி. 

"நாங்க சென்னை, அண்ணாநகர், மித்ரா விடுதியில் இருந்து வர்றோம். எங்க விடுதியிலிருந்து ஐந்து மாற்றுத்திறனாளிகளை அழைச்சுட்டு வந்தோம். இந்தச் சாதனை முயற்சியில் பங்கேற்றது அவங்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கு'' என்றார் மாற்றுத்திறனாளிகளின் காப்பாளர் கல்யாணி. 

மாற்றுத்திறனாளிகளில் ஒருவரின் தாயார், ''என் மகளுக்கு வித்தியாசமான விதவிதமான ஆடைகள், அலங்காரங்கள் மேலே ரொம்ப ஆர்வம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டது அவளுக்கு ரொமப் சந்தோசத்தைக் கொடுத்திருக்கு. இந்த வாய்ப்பை கொடுத்தவங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்'' என்றார் நெகிழ்ச்சியுடன். 

''நாம் செய்யும் எந்த ஒரு தொழிலிலும் புதுப் புது முயற்சிகள் செஞ்சுட்டே இருக்கணும். அதுதான் சலிப்பில்லாமல் நம்மை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். அந்த முயற்சிகளில், நாம் வாழும் சமுதாயத்துக்கு என்ன நன்மை செய்ய முடியும்னு கொஞ்சம் யோசிச்சா போதும். வாழ்க்கை உற்சாகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆகிடும்'' என்கிறார் இலங்கேஸ்வரி. 

சாதனையோடு சமூக அக்கறையும் பொறுப்பும் கொண்டுள்ள இலங்கேஸ்வரியின் சாதனைப் பயணம் வெற்றியின் துணையோடு இன்னும் நீளட்டும். பெண்களின் சாதிக்கும் திறன்களின் பட்டியல் இன்னும் இன்னும் நீளமாகட்டும். பெண்கள் கால் பதித்து, சாதிக்காத துறைகளே இல்லை எனும் நிலை இந்த உலகில் உருவாகட்டும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close