Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கர்நாடகத்தைப்போல தமிழர்களுக்கு வேலையில் முன்னுரிமை” - பெ.மணியரசன் கோரிக்கை

தமிழர்

கர்நாடகத்தில் இருப்பதுபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவிகிதம் வேலை ஒதுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டம், ஓசூரில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இவ்வியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தனர். அவர்கள் கூறுகையில், ''தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைபேசித் துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்பட்ட அனைத்திலும் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது சதவிகிதம் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள். 

இதைத்தவிர, தமிழ்நாட்டில் வசிப்போர் என்று போலிச் சான்றிதழ் பெற்று அயல் மாநிலத்தவர் பலர் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் வேலையிலும் கல்வியிலும் சேர்க்கிறார்கள். இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டு, நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல்மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தமிழ்நாடு தமிழர்களின் தேசிய இனத் தாயகம் என்ற சட்ட ஏற்பாகும். தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்துக்கு எதிராக, இந்திய அரசு அனைத்திந்தியத் தேர்வு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நடுவண் அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே எண்பது சதவிகிதம் அளவுக்குச் சேர்த்துவருகிறது.

அண்மையில் தமிழ்நாட்டு அஞ்சலகப் பணிகளுக்காக அனைத்திந்தியத் தேர்வெழுதியோரில் அரியானா மாநிலத்தவர் 25க்கு 25 என்ற அளவில் தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண் வாங்கிய மோசடி அம்பலமானது. ஆவடி எச்.வி.எப் - ஆயுதத் தொழிற்சாலையில் வடநாட்டவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் பி.எச்.இ.எல்., நெய்வேலி, ஆவடித் தொழிலகங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தமிழர்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள். மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரஸ் ஆட்சி சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு, 70 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையினரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கர்நாடகத்தில் இருப்பதுபோல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தியும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் மண்ணின் மக்கள் அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தீர்மானித்துள்ளது'' என்று கூறினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close