Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''எங்களுக்கு வாடகைக்குக்கூட வீடுகள் கொடுப்பதில்லை!'' வருந்தும் திருநங்கைகள்

திருநங்கை

 

 

“எங்களுக்கென்று ஒரு நிலையான இடமில்லை. தினம்தினம் நாடோடிகளைப்போல ஓடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் நிலையாக வாழ வேண்டுமெனில், எங்களுக்கென ஒரு நிரந்தர இடம் வேண்டும்” என காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் சார் ஆட்சியரிடம் மனுக் கொடுக்க வந்திருந்தார்கள் திருநங்கைகள்.

மதுராந்தகம் சார் ஆட்சியரிடம் மனுக் கொடுக்க வந்த திருநங்கைகளிடம் பேசினோம்… “நாங்கள் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் பகுதியில் உள்ள நடராஜபுரத்தில் தங்கியிருக்கிறோம். சுமார் 60 பேர் வரை அங்கிருக்கிறோம். எங்களுக்கு நிரந்தர வருமானமோ, வாழ்வாதாரமோ எதுவும் கிடையாது. நாங்கள் வாடகை வீட்டில்தான் இருக்கிறோம். வாடகையைக் கொடுப்பதற்குக்கூட நிலையான தொழில் கிடையாது. திருநங்கைகளுக்கு வீட்டை வாடகை கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அப்படி ஒருவேளை, வீட்டு உரிமையாளரே வாடகைக்கு வீடு கொடுக்க முன்வந்தாலும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் எங்களுக்கு வீடுகிடைக்காதவாறு தடுத்து விடுகிறார்கள். ஒரு சில இடங்களில் ஏற்கெனவே திருநங்கைகள் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் அப்பகுதியில் எங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கிறது. அப்படியே வாடகை கொடுக்க ஒப்புக்கொண்டாலும், இரண்டு மடங்கு மூன்று மடங்கு வாடகையை உயர்த்தித்தான் வீடு கொடுக்கிறார்கள். இதனால் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் வீடுகளில் கூட நாங்கள் அதிகப்படியான வாடகை கொடுத்துதான் வாழ வேண்டியிருக்கிறது. வேறு வழியே இல்லாமல் அந்த வீடுகளைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறோம்.

திருநங்கை

இந்தச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட எங்களைப் போன்றோருக்குக் குடும்பம் என்பது இல்லை. எங்கள் சமூகத்தில் உள்ளவர்கள்தான் எங்களுக்கு உறவினர்கள்.  சமூகம் எங்களைத் தனிமைப்படுத்திய நிலையில், மன அழுத்தத்துடன்தான் வாழ்கிறோம். அதில், தனிமை என்பது இன்னும் கொடுமையானது. அதனால் எங்களைப்போன்ற சிலருடன் நான்கு பேர், மூன்று பேர் எனக் குழுகுழுவாகச் சேர்ந்து வாழ்கிறோம். இது, எங்களுக்கு ஒருவகையில் ஆறுதலாக இருக்கும். 4,000 ரூபாய் வாடகை என்றால், அதை நான்கு பேர் பிரித்துக்கொள்வோம். ஆனால், 'நான்கு பேராக இருக்கக்கூடாது. ஒருவருக்குத்தான் வீடு… இரண்டு பேர்தான் தங்க வேண்டும்…' இப்படிக் கண்டிப்போடு வீட்டு உரிமையாளர்கள் சொல்லிவிடுகிறார்கள்.  நான்கு பேராகச் சேர்ந்து வாழும்போதே சில நேரங்களில் எங்களால் வாடகை கொடுக்க முடிவதில்லை. இப்படி இருக்கும்போது தனிஒருவராக 5,000 ரூபாய் வாடகையை எப்படிக் கொடுக்க முடியும்? 100 ரூபாய் சம்பாதித்தால், அந்தக் காசை வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடச் சொந்த இடம் கிடையாது. சொந்த வீடாக இருந்தால் ஒருபிடி சோறு என்றாலும் நிம்மதியாக உறங்குவோம்.

குடும்பமாக வாழ்பவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் எப்படி வீட்டுக்கு வருவார்களோ, அதைப்போல் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அப்படி யாராவது வீட்டுக்கு வந்தால், 'அவங்க எதுக்கு வீட்டுக்கு வர்றாங்க…? இங்கே தங்குபவர்களை தவிர யாரும், இந்த வீட்டுக்கு வரக்கூடாது…' என வீட்டு உரிமையாளர்கள் மிரட்டுகிறார்கள். எங்களுக்கென்று சொந்த வீடாக இருந்தால் எங்கள் உறவினர்கள் வருவதற்கு எந்தத் தடையும் இருக்காது. ஒருசில நேரத்தில், ‘அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காலி செய்யச் சொல்கிறார்கள். நீங்க வெளியே போங்க…’ என எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென வீட்டு உரிமையாளர்கள் சொல்லிவிடுவார்கள்.  இத்தகைய சூழலில் நாங்கள் எங்கே தங்க முடியும்? பொது இடங்களில் இரவு நேரத்தில் தங்கினால் ஏற்படும் பிரச்னைகளைச் சொல்லி மாளாது. எங்களுக்கென்று ஓர் இடத்தில் பட்டா கொடுத்தால் போதும். நாங்கள் அங்கே நிரந்தரமாக தங்கிக் கொள்வோம்.

திருநங்கை

திருநங்கைகளுக்கு வேலை கொடுக்க யாரும் முன்வருவதில்லை. மூன்றுவேளை உணவுக்காக இந்தச் சமூகத்தில் போராட வேண்டி இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காச் சிலர் டான்ஸ் ஆடப் போவோம்… சிலர் திருமணக் கூடங்களில் சமையலுக்குச் செல்வோம்… இப்படி எந்த வேலையும் கிடைக்காதவர்கள், இந்தச் சமூகத்திலே கையேந்தும் அவலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பொது இடத்தில் நான்கு பேர் கைஏந்தும் நிலை ஏற்பட்டால், அது நானூறு பேருக்குத் தெரிகிறது. ஆனால், ஒரு திருமண மண்டபத்தில் நான்கு பேர் வேலை செய்தால், 40 பேருக்குக்கூடத் தெரிவதில்லை. அதனால்தான் எங்களுக்கென்று நிரந்தர இடம் வேண்டும் என்று கேட்கிறோம்.

அதற்காக இதுவரை மூன்று முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்தோம். அவர்கள், ‘மதுராந்தகத்தில் உள்ள சப்-கலெக்டரிடம் ஒவ்வொருவரும் தனித்தனியாக மனுக் கொடுங்கள். நாங்கள் அதைச் சரிபார்த்துவிட்டு, உங்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்’ என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொன்னார்கள். அதனால் மதுராந்தகத்தில் உள்ள சப்-கலெக்டரிடம் மனுக் கொடுத்துள்ளோம். அதுபோல் சமூகநலத் துறை மூலமாக டெய்லரிங் சொல்லிக் கொடுப்பதாக எங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.  ஆடு, மாடுகளை வளர்க்கச் சிலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த உதவிகள் எங்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் யாரிடமும் கையேந்தும் நிலை இருக்காது” என்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close