Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கையால் எழுதிய ப்ளஸ் ஒன் ஃப்ரெஞ்ச் கேள்வித்தாள்! - புரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் குழப்பம்

ப்ரெஞ்ச் கேள்வித்தாள்

தமிழகத்தில் நடைபெற்று வரும் காலாண்டுத் தேர்வுக்கான ப்ளஸ் ஒன் ஃப்ரெஞ்ச் பாடத்துக்கான கேள்வித்தாள் கையால் எழுதப்பட்டு இருந்ததால் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் தவித்தனர். 

இந்தக் கல்வியாண்டு முதலாக தமிழகத்தில் ப்ளஸ் ஒன் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது. அதன்படி, தற்போது நடைபெற்று வரும் காலாண்டுத் தேர்வானது தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்தத் தேர்வில், ஃப்ரெஞ்சுப் பாடத்தை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோரும் மாணவர்களும் குமுறுகின்றனர். அதிகாரிகளின் கவனக் குறைவால் தங்களால் முழுமையாகத் தேர்வு எழுத முடியாமல் போனதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 11, 12-ம் தேதிகளில் ப்ரெஞ்ச் முதலாவது மற்றும் இரண்டாவது பேப்பர் பாடத்துக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் கையால் எழுதப்பட்டு அதை பிரின்ட் எடுத்து வழங்கியிருந்தனர். கூட்டெழுத்துகளில் எழுதப்பட்ட அந்தக் கேள்வித்தாளை 4 பக்கத்துக்குள் பிரின்ட் எடுத்துவிட வேண்டும் என்கிற கட்டாயத்தால் மிகவும் சிறிய அளவில் எழுத்துகளை நுணுக்கி பிரின்ட் எடுத்து இருக்கிறார்கள். 

அதனால் கேள்வித்தாளைப் படிக்கவே மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானதாக ஆசிரியர்களே ஒப்புக்கொள்கின்றனர். முதல் தாள் மட்டுமல்லாமல் இரண்டாம் தாளுக்கான கேள்விகளும் இதே போலவே இருந்ததால் மாணவர்கள், வினாத்தாளைப் புரிந்து படித்து விடைகளை எழுத சிரமப்பட்டதாகத் தேர்வு அறையில் இருந்த ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர். சில கேள்விகளுக்கான மதிப்பெண் எவ்வளவு? என்பது போன்ற தகவலும் அதில் இடம்பெற்றிருக்கவில்லை. 

இது குறித்து ஃப்ரெஞ்ச் பாட ஆசிரியர்களிடம் பேசுகையில், ‘‘வழக்கமாக ஃப்ரெஞ்ச் கேள்வித்தாள்கள் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை பிரின்ட் செய்யப்பட்ட போதிலும், கையால் எழுதி அதை பிரின்ட் போட்டிருக்கிறார்கள். அதைப் படிக்கவே முடியாதபடி சிறியதாகவும் அச்சிட்டுள்ளனர். அதனால் அவற்றைப் படிக்க முடியாமல் மாணவர்கள் நிறைய கேள்விகளை விட்டுவிட்டனர். சில கேள்விகளுக்கான விடைகள் தெரிந்திருந்தபோதிலும் கேள்விகளை வாசிக்கவே முடியாததால் பதில் எழுதவில்லை. இனியாவது இது போன்ற குளறுபடிகள் இல்லாமல் தேர்வுகளை நடத்தினால் நல்லது’’ என்கிறார்கள். 

’ஏற்கெனவே நீட் விவகாரத்தால் மாணவர்கள் குழப்பத்தில் இருக்கும் சூழலில், தேர்வு நடத்துவதில் நேர்மையாகச் செயல்படுவதே கல்வித்துறைக்கு அழகு’ என்று கல்வியாளர்கள் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close