Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி பொதுக்கூட்டத்தை தினகரன் ரத்து செய்தது ஏன்?

தினகரன்

மிழகத்தில் நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் மனம் உடைந்து, அரியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. 

தேசிய அளவில் ஒரே தகுதித்தேர்வு நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது, தமிழகம் போன்ற மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை-எளிய மக்களின் பிள்ளைகள், பிளஸ்-டூ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றுவந்த நிலைக்கு, 2017-ம் ஆண்டு முதல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, கடைசிவரை தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், தங்களின் மருத்துவக் கனவு தகர்ந்ததால், வெதும்பிப் போய் உள்ளனர். அதுபோன்ற மாணவிகளில் ஒருவர்தான் அனிதா. ஆனால், அவர் ஒருபடி மேலேபோய் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவால், அரசியல் களம் ஒருபுறம் குழம்பிப்போயுள்ள நிலையில் அனிதாவின் மரணம், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இணைந்த பின்னர், தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். தினகரன் அணியில் 21 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி தரப்பு, அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்துள்ளது. "சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது, அவர் வெளியிட்ட உத்தரவுகளும் செல்லாது; தினகரனின் அறிவிப்புகளும் செல்லாது" என்று எடப்பாடி - ஓ.பி.எஸ். நடத்திய பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பொதுக்குழு முடிவுகளுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக, பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராகவும், தமிழகத்தில் அத்தேர்வுக்கு விலக்கு அளிக்காத மத்திய அரசையும், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாத மாநில அரசையும் கண்டித்து, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், செப்டம்பர் 8-ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தின. இதற்குப் பதிலடியாகவும், நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கியும் தமிழக பி.ஜே.பி. சார்பில், திருச்சியில் எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்திய அதே இடத்தில், அடுத்த நாள் அதாவது, செப்டம்பர் 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 

தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக, உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது. எனினும், அமைதியான முறையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, நீட்-க்கு எதிராக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை டி.டி.வி. தினகரன் ரத்துசெய்தார். மேலும், திருச்சியில் நாளை மறுநாள் (செப்டம்பர் 16) நடத்தவிருந்த பொதுக்கூட்டத்தை தினகரன் ரத்துசெய்துள்ளார். தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தடை காரணமாகவும், எடப்பாடி தரப்பினரின் பொதுக்குழு முடிவு என்னவாகும் என்பது தெரிய வராததாலும் தினகரன் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. தவிர, ஃபெரா உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கெனவே விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில், 'தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் மேலும் சர்ச்சையில் சிக்கிக்கொள்ள வேண்டாம்' என்பதே தினகரனின் நிலைப்பாடாக உள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக, தேர்தல் ஆணையமோ அல்லது நீதிமன்றமோ முடிவெடுக்கும்பட்சத்தில், அதற்கேற்ப தங்கள் போராட்ட உத்தியை வகுத்துக்கொள்ளலாம் என்று தினகரனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனராம். எனவே, 'எடப்பாடி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, அடுத்த சில தினங்களில் ஆளுநர் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்து, தினகரனின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்' என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தினகரனின் அடுத்த அதிரடி திட்டம் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close