Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தம்பிதுரை பொறுப்பையும் பறித்தார் தினகரன்!

அ.தி.மு.க அம்மா கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து தம்பிதுரையையும், நாகை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனையும் நீக்குவதாக, டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, முதல்வர் பதவிக்கும் ஆசைப்பட்டதால், அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கி, தனி அணியாகப் பிரிந்தார். சசிகலா, தினகரன் சிறைக்குச் சென்றதன் விளைவாக, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்தது. இதைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரனைக் கட்சியிலிருந்து நீக்குவதாகவும், அவர் நியமித்த உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என்றும் பழனிசாமி அணி தீர்மானம் நிறைவேற்றியது.

தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும், துணைப் பொதுச் செயலாளர் நான்தான் என்று கூறி, அமைச்சர்கள் வகித்துவந்த கட்சிப் பொறுப்பைப் பறித்ததோடு, அந்தப் பொறுப்புக்குத் தனது ஆதரவாளர்களை நியமித்தார். அது, இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனிடையே, கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவைத் துணை சபாநாயகரும் பழனிசாமி அணியைச் சேர்ந்தவருமான தம்பிதுரையிடம் இருந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பையும் தினகரன் இன்று பறித்ததோடு, அந்தப் பொறுப்புக்குத் தனது ஆதரவாளரான எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வனை நியமித்துள்ளார். மேலும், நாகை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியனையும் நீக்கியுள்ளார், தினகரன்.

'கட்சியிலிருந்து தினகரன் நீக்கப்பட்ட நிலையில், அவர் எப்படி கட்சியில் உள்ளவர்களைப்  பொறுப்பிலிருந்து நீக்கமுடியும்' என்று பழனிசாமி அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close