Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லையில் தொடர் கனமழை... சேர்வலாறு அணை ஒரே நாளில் 23 அடி உயர்வு!

கனமழை அருவியில் வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால்,  இரண்டாவது நாளாக இன்று சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடைவிதித்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. களக்காடு மலைப் பகுதியில் பெய்யும்  மழையால், தலையணை அருவியில் நீர்வரத்து அதிகமாக இருக்கிறது. இதனால், கடந்த இரு தினங்களாக தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது.

தலையணை

சேர்வலாறு அணையின் நீர்மட்டம், நேற்று 66 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 89 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணைக்கு 1913 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படவில்லை என்பதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் அதிகரித்தபடி இருக்கிறது. 143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 84 அடியாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு 2,804 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 305 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 43 அடியாக உள்ளது. தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துவருவதால், மக்கள் மனம் குளிர்ந்துள்ளனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close