Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்!

நாட்டுப்படகு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாட்டுப்படகு உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 5000-க்கும் அதிகமான நாட்டுப்படகுகள் உள்ளன. இதன்மூலமாக ஏராளமானோர் கடலுக்குச் சென்று மீன் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். விசைப்படகுகளால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. விசைப்படகுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிற ஆதங்கமும் நாட்டுப்படகு மீனவர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்ட நாட்டப்படகு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த ரெய்மண்ட், ஜூடு, அந்தோணி உள்ளிட்ட ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்  இன்று மனு அளித்தனர். அதில், ’எங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சட்ட விதிமுறைகளை மீறிச் செயல்படும் விசைப்படகு மீனவர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தனர். 

மீன்வர்கள்

இதுதொடர்பாக நாட்டுப்படகு மீனவர் சங்கங்களின் நிர்வாகிகளிடம், பேசுகையில், ’’தமிழகத்தில் 5 சதவிகிதம் இருக்கும் விசைப்படகு மீனவர்களின் தவறான நடவடிக்கைகள் காரணமாக 95 சதவிகிதம் இருக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறோம்.  கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு, உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு ஆய்வுசெய்து மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தின்படி விசைப்படகின் நீளம் 20 மீட்டர் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், அதை மீறும் வகையில் 35 மீட்டர் நீளம் வரையிலுமான விசைப்படகுகள் உள்ளன.

விசைப்படகுகளில் பொறுத்தப்படும் இயந்திரம் 150 குதிரைத்திறன் கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்கிற விதியை காற்றில் பறக்கவிட்டு 750 குதிரைத் திறன் கொண்ட ராட்சத பலம்கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க வேண்டும் என்கிற விதியையும் அவர்கள் பின்பற்றுவது இல்லை. கடற்கரையில் இருந்து 3 கடல் மைலுக்கு அப்பால் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்கிற விதியையும் கூட விசைப்படகுகள் கடைப்பிடிப்பதில்லை. 

அத்துடன், மீன்பிடிக்க பயன்படுத்தும் வலையானது 25 மில்லி மீட்டருக்கு அதிகமானதாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கொசுவலை போன்ற நெருக்கமான வலையை பயன்படுத்துகிறார்கள். தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் கடல் வளம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைக் கண்காணிக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதுபற்றி நாங்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

அதனால் அதிகாரிகளைக் கண்டித்தும் சட்டத்துக்கு முரணான வகையில் செயல்படும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்கிறோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து இருக்கிறோம். இதன் பின்னரும் விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டுப் படகு மீனவர் சங்கங்களின் சார்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close