Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தகுதி நீக்கத்தால் கதறி அழுத மூன்று எம்.எல்.ஏ-க்கள்!

தகுதி நீக்கம் அறிவிப்பைக் கேட்டு பெண் எம்.எல்.ஏ உள்பட மூன்று எம்.எல்.ஏ-க்கள் கதறி அழுததாகத் தகவல் வெளியாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தினகரனை ஆதரித்த 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தனர். அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார்.

அடுத்து, 7 எம்.பி-க்கள், அ.தி.மு.க கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ நடிகர் கருணாஸ் மற்றும் இரண்டு பேர் என 10 பேருடன் தினகரன், ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்தித்தார். இதற்கிடையில், சட்டசபைக்குள் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்ததாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்குச் சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டதோடு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க செப்டம்பர் 20-ம் தேதி வரை தடையும் விதிக்கப்பட்டது. இதனால், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்களில் 19 பேரில் ஜக்கையன் எம்.எல்.ஏ-மட்டும் மனம் மாறி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தார். சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கும் பதிலளித்தார். இதனால், ஜக்கையனைத் தவிர 18 எம்.எல்.ஏ-க்கள் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பைக் கேட்ட கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கண்கலங்கியுள்ளனர். மேலும், ஒரு பெண் எம்.எல்.ஏ-வும் கண்கலங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூன்று பேரும் முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

இதுகுறித்து எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "தகுதி நீக்கம் அறிவிப்பு வெளியானதும், போனில் எம்.எல்.ஏ-வுடன் பேசினேன். அப்போது, அவரது குரல் உடைந்திருந்தது. எம்.எல்.ஏ-வுக்குப் போட்டியிட்டபோது செலவழித்த தொகை, அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சோகமாகவே எம்.எல்.ஏ பேசினார். ஒருகட்டத்தில் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அமைதியான அந்த சமயத்தில் கதறி அழும் சத்தம் மட்டுமே கேட்டது" என்றார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் குடும்பத்தினரும் அவரின் ஆதரவாளர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close