Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலத்தடி நீர் திருட்டு: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார்  தொழிற்சாலைகளுக்காக நடந்துவரும் நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி, தொடர்போராட்டம் நடத்திவந்த நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன்னரே போலீஸார் அவர்களை கைதுசெய்தனர்.

நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினருடன் இணைந்து போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, பச்சைத்தமிழன் இயக்கத்தின் மாநிலத் தலைவர் உதயகுமார் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆடு, நாய்களுடன் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, ‘’தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர் குறைந்துவரும் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டமும் உள்ளதாக அரசே செய்தி வெளியிட்டுள்ளது. குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாத  சூழலில் தனியார் நிறுவனங்களுக்கும், தனியார் தொழிற்சாலைகளுக்கும் தினமும் சுமார் 10 கோடி லிட்டர்  நிலத்தடி நீரை, ஆழ்துளை கிணறுகள் மூலமாக உறிஞ்சி சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் மூலம் வணிக நோக்கில் சப்ளை செய்யப்பட்டு வரப்படுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் துணை போகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க தடை விதித்தார். அதோடு சில கிராம மக்களால் கடந்த ஜூலை மாதம் நிலத்தடி நீர் உறிஞ்ச உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. ஆனால், இவை இரண்டையும் பொருட்படுத்தாமல் நிலத்தடி நீர் திருட்டு தொடர்ந்து தடையில்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆடு, நாய்களுடன் குடியேறும் போராட்டம்

பல முறை டேங்கர் லாரிகளைப் சிறைப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் எந்தப்பலனும் இல்லை. இந்நிலையில், ஆடு, நாய்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஆட்சியர் உடனே தலையிட்டு நிலத்தடி நீர் திருட்டை தடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்’’ என்றார்.

ஸ்ரீவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்தபின் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திடும் வகையில் போராட்டக்காரர்கள் திட்டம் வகுத்த நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close