Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போக்குவரத்துத் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்படுமா?: இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக நோட்டீஸ் அளித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கான 12 வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிந்தது. ஆனால், இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு மற்றும் ஊழியர்கள் தரப்பில் இதுவரை 16 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, வேலைநிறுத்த நோட்டீஸைப் போக்குவரத்துத் துறை செயலாளரிடம் கடந்த 9-ம் தேதி அவர்கள் அளித்தனர். அதில், செப்டம்பர் 24-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், அவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்க இருப்பதாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்ட நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான உறுதிமொழியும் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில், உடன்பாடு எட்டப்பட்டால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படும் என்று தெரிகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close