Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு கொசுக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு... சுகாதார அமைச்சருக்கு சீர்வரிசை!

''டெங்கு கொசுக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து சுகாதார அமைச்சருக்கு சீர்வரிசை அனுப்பப்படும்'' என்று தமிழ்நாடு பெண்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் சார்பக்ச் சுகாதார சீர்கேட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் டெங்கு கொசுக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் செயலாளருக்கும் சீர்வரிசைகள் வழங்குவோம் என வித்தியாசமான அறிவிப்புகள் செய்தார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரி கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைபாடுகளால் 400-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரத்த கழிச்சல் நோயால் 88 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் டெங்கு கொசுவால் ஏற்படும் நோய்கள். பண்டை காலத்தில் கொடிய வியாதிகள் வந்து மக்களைக் கொத்துக்கொத்தக்ச் சூறையாடிச் சென்றதைப்போல தற்போது டெங்கு காய்ச்சலால் பலபேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால், அரசு இன்றுவரை இந்த டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆராய்ச்சி செய்து மருத்து கண்டுபிடிக்கவும் முயற்சி செய்யவில்லை. மாறாக வேம்புக் கசாயத்தை மட்டும் கொடுக்கிறார்கள்.

சேலம் மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சுகாதாரம் சீரழிந்துவிட்டது. சின்டெக்ஸ் டேங்குகள் பழுதடைந்து குடிநீர் வீணாகி தேங்கிக் கிடப்பதால் டெங்கு கொசுக்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்தில் சொன்னால் குப்பைகள் அள்ளுவதற்குத் தனியாரிடம் டெண்டர் விட்டதைப்போல சின்டெக்ஸ் டேங்குகளும் தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவர்களிடம் போய் கேளுங்கள் என்று பொறுப்பற்ற பதில் சொல்லுகிறார்கள்.

இதற்கிடையே மாநகராட்சி சார்பாக 10 மருத்துவர்கள் அடங்கிய ரத யாத்திரை மூலம் பொது மக்களுக்கு டெங்கு ஒழிப்பு விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சாலை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு ரோட்டோரக் கடையில் டீ, வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் டெங்கு ஒழிப்புக்காகப் பல போராட்டங்கள் செய்துவிட்டோம்; எந்தப் பயனும் இல்லை. மொத்தத்தில் அரசு இயந்திரம் செயலற்றுப் போய்விட்டது. மதுரையில் வைகை அணையில் தண்ணீர் ஆவியாதலைத் தடுப்பதற்கு செல்லூர் ராஜூ மேற்கொண்ட தெர்மாகோல் பிளான் மாதிரி டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கு மருத்துவர்கள் குழுவோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து டெங்கு கொசுக்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கொசுக்களுக்கு குடும்பக் கட்டுபாடு செய்து சீர்வரிசையை சுகாதார அமைச்சருக்கும் சுகாதார செயலாளருக்கும் அனுப்புவோம்'' என்றார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close