Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாடிக்கையாளர் அடிக்கும் மணிதான் முக்கியம்..! 15 வருட 'டீ'க்கடை உரிமையாளர் நெகிழ்ச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்படும் 'டெல்லி சர்பத்- பாலு டீ ஸ்டால்' உரிமையாளர் பாலசுப்ரமணியம், மிகவும் வித்தியாசமானவர். இவர், தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் மன நிறைவை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில், கடை வாசல் முன் வெண்கல மணி ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டுள்ளார்.

kovil

இவரது கடையில் சாப்பிட்டவை மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்றால், வெளியே செல்லும்போது மணியை ஒருமுறை அடித்துவிட்டுச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள். திருப்தி ஏற்படாதவர்கள், மணியை அடிக்காமல் சென்றுவிடுகின்றனர். பனங்கற்கண்டு பால், இஞ்சி டீ, டெல்லி சர்பத் உட்பட, பல்வேறு பொருள்கள் விற்கும் இவரது கடையில் பீடி, சிகரெட், புகையிலை போன்றவை விற்பதில்லை. ஏனென்றால், ''தினந்தோறும் என் கடைக்கு இளைஞர்கள்தான் அதிகம் வருகிறார்கள். அவர்களைத் தவறாக வழிநடத்தும் எந்த ஒரு பொருளையும் விற்கக்கூடாது என ஒரு கொள்கையோடு இருக்கிறேன்'' என்கிறார்.

kovil

மேலும், இதுகுறித்து பாலசுப்ரமணியம் கூறுகையில், ''மக்களின் குறை தீர்க்க அரண்மனை வாசலில் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிட்ட மனுநீதிச் சோழ மன்னர்தான் எனக்கு முன்னுதாரணம். 15 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்திவருகிறேன். வாடிக்கையாளர்களின் குறையைத் தீர்க்க முடிவெடுத்து, 5 ஆண்டுகளுக்கு முன் இந்த  மணியை கடையின் முன்பு கட்டினேன். ஒவ்வொரு வாடிக்கையாளரும் வெளியே செல்லும்போது எழுப்பும் மணியோசை காதில் விழுந்தால்தான், என் மனம் நிறைவடையும். யாரேனும் மணி அடிக்காமல் சென்றால், சாப்பிட்டதில் எது பிடிக்கவில்லை, என்ன குறை என்று கேட்டு, அடுத்த முறை வாருங்கள் சரியாகிவிடும் என்று தெரிவிப்பேன்.

சில கடைகளில் புகார் பெட்டி அல்லது குறிப்பேடு வைத்திருப்பார்கள். இந்த நடைமுறைகளால் வாடிக்கையாளரின் மனதில் இருப்பதை அறிவது கால தாமதமாகும். ஆனால், மணி அடிப்பது என்றால் உடனே தீர்வு கிடைத்துவிடும். கடமைக்கு ஒரு பொருளை விற்றுவிட்டோம் என்று இல்லாமல், வாடிக்கையாளர் திருப்தி அடைந்தார் என்பதை அறிந்தால்தான் செய்யும் தொழில் சிறக்கும். வாடிக்கையாளரை ஏமாற்றத் தோன்றாது. இந்த நடைமுறையை அனைத்துக் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பின்பற்றினால், வாடிக்கையாளர்- வர்த்தகர் உறவு மேம்படும், வியாபாரம் செழிக்கும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close