Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆளுநரா... அ.தி.மு.க. அவைத்தலைவரா?!” - திருச்சியில் கடுகடுத்த தினகரன்

‘நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தை' திருச்சி உழவர் சந்தையில், பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் டி.டி.வி தினகரன்! தடைகள் பல தாண்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக ஜெயலலிதா அப்போது பேசியிருந்த ஆடியோவை ஒலிக்கவிட்டனர். கூட்டத்தில் பேச ஆரம்பித்த டி.டி.வி தினகரன், “நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும்” என்று தலைப்புக்கு நியாயம் சேர்த்தவர் அதன்பின்பு பேசியதெல்லாம் நடப்பு அரசியல். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வார்த்தைகளால் துவைத்தெடுத்து தொங்கப்போட்ட அவரது பேச்சுக்கள் அப்படியே இங்கே...

TTV Dinakaran

“சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் நிரூபிப்போம். மீண்டும் சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துக்கு நிச்சயம் தள்ளப்படுவார். அப்போது அவரும், அவரோடு இருக்கின்ற அமைச்சர்களும் வீட்டுக்குப் போகிற காலம் வரும். 

'நீங்கள் தி.மு.க-வோடு கைகோத்துக்கொண்டு ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறீர்களா? என்று என்னிடம் சில தொலைக்காட்சி நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் கேள்வி கேட்டனர்.  ஊழல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற இந்த பழனிசாமி அன்கோவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தேர்தல் மூலம் மீண்டும் அம்மா ஆட்சியை உருவாக்குவதற்காகத்தான் நான் இந்த முயற்சியிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். 'தி.மு.க' என்ற கட்சிக்கு எதிராகத்தான் புரட்சித் தலைவர் அ.தி.மு.க என்ற கட்சியையே உருவாக்கினார். அப்படியிருக்கையில், நாங்கள் எப்படி தி.மு.க-வோடு கைகோக்க முடியும்? அ.தி.மு.க-வின் பிரதான எதிரியே தி.மு.க-தான் என்பது ஏழரை கோடி தமிழ் மக்களுக்கும் தெரியும்.

தமிழகத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்தபிறகு தேர்தல் என்றைக்கு வந்தாலும் நாம் மாபெரும் அளவில் வெற்றிபெற்று, மீண்டும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் ஆட்சியை, புரட்சித் தலைவி அம்மாவின் வழியிலேயே நாம் உருவாக்கிக் காட்டுவோம் என்பதை நான் சபதமாகவே கூறிக்கொள்கிறேன். அ.தி.மு.க-வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமும் அதுதான் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தத் துரோகக் கும்பல் தமிழக ஆட்சிப் பீடத்தில் இனியும் இருக்கக்கூடாது என்றுதான் தமிழக மக்களும் குறியாக இருக்கிறார்கள். 

Trichy general meeting

அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநர் உத்தரவிட வேண்டும் என இங்கே கூடியிருக்கின்ற உங்களின் வாயிலாக நான் கோரிக்கை வைக்கின்றேன். அப்படிச் செய்தால்தான் ஆளுநர் பதவியின்மீது மக்களுக்கும் நம்பிக்கை வரும். இல்லையென்றால், கடந்த ஒரு மாதமாக அவர் பாரபட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற தமிழகத்தின் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். 

ஆளுநர், ஆளுநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது பழனிசாமி அன்கோவின் அவைத் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி நமது தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல... பொதுமக்களின் மத்தியிலும் நிலவிவருவதை ஆளுநர் தயவுசெய்து கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

இன்றைக்கு நம்மால் முதல்வர் பதவியில் அமர்த்தி வைக்கப்பட்டிருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. நமது  சின்னம்மா, கடந்த பிப்ரவரி 16-ம் தேதி நினைத்திருந்தால், என்னை முதல்வராக்கிவிட்டுச் சென்றிருக்க முடியும். ஆனால், நாங்கள் என்றைக்கும் பதவியைப் பெரிதாக நினைப்பவரல்ல. அ.இ.அ.தி.மு.க-தான் எங்களது உயிர்மூச்சு என்பதை நிரூபிக்கின்ற விதமாகவே, அமைச்சராக இருந்த பழனிசாமியை நாங்கள் முதல்வராக்கினோம். ஆனால், அவர் இன்றைக்கு ஜாதியைச் சொல்லி, ‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்’ என்றெல்லாம் சொல்லி கட்சிக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட இயக்கம் அ.தி.மு.க. ஆனால், எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே இந்த மாபெரும் இயக்கத்திலே ஜாதி, மத பேதங்களை உருவாக்கப் பார்க்கிறார் பழனிசாமி. 

TTV Dinakaran

கடந்த 15 நாள்களுக்கு முன்பு, நான் அவிநாசிக்குச் சென்றிருந்தேன். நமது கழகத்தின் மாவட்டச் செயலாளர் திருப்பூர் சிவசாமியின் இல்லத் திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன். அந்த விழாவிலே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 10, 15 ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் என்னிடம், 'இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள். மீண்டும் தமிழகத்திலே அம்மாவின் ஆட்சியைக் கொண்டுவாருங்கள். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் சின்னம்மாவுக்குத் துரோகம் செய்வதை எங்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஏனெனில், எங்கள் கொங்கு மண்டலம் என்பது புரட்சித் தலைவர் காலத்திலிருந்தே அ.இ.அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை! புரட்சித் தலைவருக்கும் இதய தெய்வம் அம்மாவுக்கும் மாபெரும் ஆதரவாக இருக்கின்ற கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால், நீங்கள் பழனிசாமியை முதல்வராக்கியிருக்கிறீர்கள். ஆனால், அவர் இன்றைக்கு செல்கின்ற பாதை சரியல்ல... அவரது நடவடிக்கைகள் எங்களது கொங்கு மண்டலத்துக்கே அவமானமாக இருக்கின்றது. எனவே, அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் அம்மா ஆட்சியை ஏற்படுத்தித் தாருங்கள்' என்று கோரிக்கை வைத்தார்கள்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close