Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோவில் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் விபத்து ஏற்படும் ஆபத்து உருவானது.  விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ விபத்து

நெல்லை மகாராஜநகரில் உள்ள காஸ் ஏஜென்சியிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியில் விநியோகம் செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தது. ஆட்டோவை கண்ணன் என்பவர் ஓட்டிச்சென்றார். சீவலப்பேரி ஊருக்குள் சென்றபோது ஆட்டோவின் இஞ்ஜினில் திடீரெனத் தீப்பிடிக்கத் தொடங்கியது. 

ஆட்டோவில் 26 காஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர்களும் 20 காலி சிலிண்டர்களும் இருந்தன. தீயைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கண்ணன், ஆட்டோவைச் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடிவிட்டார். வேகமாகப் பரவிய தீ அனைத்துப் பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. அந்த இடத்தின் அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பொதுமக்களும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். 

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆட்டோவில் இருந்த சிலிண்டர்களை அவசரமாக இறக்கி அப்புறப்படுத்தினார்கள். அதனால் அந்தப் பகுதியில் ஏற்படவிருந்த பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. லோடு ஆட்டோவின் முன்பகுதி எரிந்து சேதம் அடைந்தது. இந்தச் சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்ததைத் தடுத்து நிறுத்திய தீயணைப்புத் துறையினரைப் பொதுமக்கள் பாராட்டினார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close