Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நான் உங்களின் ஒருவன்' - தற்கொலைக்கு முயன்ற காவலரை நெகிழவைத்த காஞ்சிபுரம் எஸ்.பி

குடும்பப் பிரச்னையால் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்ற காவலரை சக காவலர்கள் தடுத்துநிறுத்தியதோடு, காஞ்சிபுரம் எஸ்.பி-க்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த எஸ்.பி எந்தப் பிரச்னையானாலும் என்னிடம் சொல்லுங்கள்; நான் உங்களில் ஒருவன்" என்று காவலர்கள் மத்தியில் உருக்கமாகப் பேசி நெகிழ வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல போலீஸ் வாகனத்தில் இன்று காலை ஏறினர். அப்போது, ஒரு காவலர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அதைப்பார்த்த சக போலீஸார் உடனடியாகத் தடுத்தனர். இந்தத் தகவல் உடனடியாக போலீஸ் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானிக்குத்  தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்.பி, தற்கொலைக்கு முயன்ற காவலரிடம் அன்பாகப் பேசியுள்ளார். அவரைத் தனியாக அழைத்துச் சென்று மன வருத்தங்களைக் கேட்டறிந்துள்ளார். அப்போது, 'உங்களுக்கு என்ன பிரச்னை, எதற்காகத் தற்கொலைக்கு முயன்றீர்கள், வீட்டில் ஏதாவது பிராப்ளமா... எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், நான் இருக்கிறேன். பணியில் பிரச்னை என்றால் சொல்லுங்கள். இடமாற்றம் வேண்டும் என்றால் கேளுங்கள். அதைச் சரிசெய்து தருகிறேன்' என்று ஆறுதலாகக் கூறியுள்ளார். அப்போது, "அந்தக் காவலர், தனக்குப் பணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. வீட்டில்தான் சில பிரச்னை என்று கூறியிருக்கிறார்." அதற்கு, "என்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்கிறேன்" என்று போலீஸ் எஸ்.பி கூறியிருக்கிறார்.

இதன்பிறகு ஆயுதப்படை போலீஸாரிடம் எஸ்பி, "பிரச்னைக்காக யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். நான் உங்களில் ஒருவன்"  என்று உருக்கமாகப் பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு, சக காவலர்களையும் போலீஸ் உயர் அதிகாரிகளையும் நெகிழ வைத்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், போலீஸ் எஸ்.பி-க்குத் தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்று விசாரித்தார். காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் மனநலமும் உடல்நலமும் முக்கியம். பணியில் பிரச்னை என்றால் அதைச் சரிசெய்து கொடுக்கலாம். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல" என்றார்.

தற்கொலைக்கு முயன்ற காவலரின் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டதால் அவரது விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close