Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இரட்டை இலை' சின்னம் யாருக்கு?: அக்டோபர் 5-ல் இறுதி விசாரணை!

'இரட்டை இலை' சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அக்டோபர் 5-ம் தேதி இறுதி விசாரணை நடத்தவிருக்கிறது. 

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிகள் ஒன்றிணைந்தனர். மேலும், கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் ஆதரவுடன் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தையும் நடத்தி முடித்தனர். இரட்டை இலைச் சின்னம் முடக்கம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், 'இரட்டை இலை' சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து, சின்னம் தொடர்பான இறுதி விசாரணையைத் தேர்தல் ஆணையம் நடத்தவிருக்கிறது. இதுதொடர்பாக மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர் பிரமோத் குமார் ஷர்மா அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், இரட்டை இலை' சின்னம் தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. சின்னம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல்செய்ய, செப்டம்பர் 29-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை, அக்டோபர் 5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. 
எனவே, மேற்கூறியவர்களோ அல்லது அவர்களது சார்பில் வழக்கறிஞர்களோ விசாரணைக்கு ஆஜராகலாம். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி நிலவரப்படி, கட்சியின் பொதுக்குழு மற்றும் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பட்டியலை, அந்தந்த அணிகள் தாக்கல்செய்ய வேண்டும்’ என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close