Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாமிரபரணி ஆற்றில் 2-ம் கட்ட தூய்மைப் பணி: 60 இடங்களில் 7,500 மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு!

தாமிரபரணி ஆறு

தாமிரபரணி ஆற்றில், இரண்டாம் கட்ட தூய்மைப்படுத்தும் பணிகள் நாளை நடக்க உள்ளன. 60 இடங்களில் நடக்க உள்ள இந்தப் பணிகளில் 7,500 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயத் தேவையைப் பூர்த்திசெய்வதுடன், நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்குப் பயன்படும் தாமிரபரணி ஆறு, மாசடைந்துள்ளது. ஆற்றின் கரையில் புதர்ச் செடிகள் வளர்ந்துகிடப்பதுடன், ஆற்றுக்குள் கழிவுப் பொருள்கள், பிளாஸ்டிக் குப்பைகள், பழைய துணிகள் போன்றவை நிரம்பிக் கிடக்கின்றன. அதனால், ஆறு சீர்கெட்டுவிட்டது.

இது தொடர்பாக, பல்வேறு சமூக நல அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச்சென்றன. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் முயற்சியால், கடந்த ஜூன் மாதத்தில் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம்செய்யும் பணிகள் நடைபெற்றன. பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட 2,000-க்கும் அதிகமானோர் இணைந்து மேற்கொண்ட இந்தப் பணியால், சுமார் 5 கி.மீ தூரம் சுத்தம்செய்யப்பட்டது. 

சுத்தப்படுத்தும் பணி

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக நாளை மீண்டும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ’தாமிரபரணியைச் சுத்தப்படுத்தும் முதல்கட்டப் பணிகள் சிறப்பாக நடந்தன. அடுத்த கட்டமாக, மீண்டும் தாமிரபரணி நதியைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை, பாபநாசம் முதல் நெல்லை வரையிலான இடங்களில் சுத்தம்செய்யும் பணிகள் நடக்கவிருக்கின்றன.

இந்தப் பணியில் கல்லூரி மாணவர்கள், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர், காவல்துறையினர், அரசு ஊழியர்கள் என 7,500 பேர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 60 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 30 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் 20 அரசுப் பள்ளிகளின் மாணவர்களும் இந்தப் பணியில் பங்கேற்க உள்ளனர். இதில், பொதுமக்களும் பங்கேற்கலாம். தாமிரபரணியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட விரும்புபவர்கள் 9566793188 மற்றும் 9566688724 என்ற எண்களில் தொடர்புகொண்டு, தங்களுடைய பெயர்களைப் பதிவுசெய்தால், பணி செய்வதற்கான இடம், இணைந்து செயலாற்றுவதற்கான குழுக்கள்குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close