Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பழனிசாமியிடமிருந்து கிரீன் சிக்னல் வரும்!' -  காத்திருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் #VikatanExclusive

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,தினகரன்

Chennai: 

  'முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து எங்களுக்கு கிரீன் சிக்னல் வரும்' என்று கர்நாடகாவில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க, தினகரன் ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜக்கையன் எம்.எல்.ஏ-வைத் தொடர்ந்து, தினகரன் அணியிலிருந்த வசந்தி முருகேசன் எம்.பி-யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினார். அடுத்து, முதல்வர் அணிக்கு செல்லப்போவது யார் என்ற கேள்வியோடு தினகரன் அணியினர் உள்ளனர். இனி யாரையும் முதல்வர் அணிக்கு மாறவிடக்கூடாது என்ற முடிவோடு இருக்கிறார் தினகரன். இதற்கான ஆலோசனையில், தினகரனும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களில் சிலர், எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறத் தயாராக உள்ள தகவல் தினகரனுக்குத் தெரியவந்தது. இதனால், கர்நாடக சொகுசு விடுதிக்குச் சென்று, அங்குள்ள ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார் தினகரன். அப்போது, தினகரன் தரப்பிலிருந்து முன்னாள் எம்,எல்,ஏ-க்களுக்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள்மூலம் தினகரனை ஆதரித்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்தத் தகவலை கர்நாடக சொகுசு விடுதியிலிருக்கும் தினகரனின் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். "கூவத்தூர் ரிசார்ட்டில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழியைக்கூட இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை. கூவத்தூரில், சசிகலாவுக்கு சிறைத் தண்டணை உறுதியானதும் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் ரேஸில் தினகரன், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், செந்தில்பாலாஜி ஆகியோர் இருந்தனர். அவர்களுடன், சசிகலா ஆலோசனை நடத்தினார். அப்போது, சில வாக்குறுதிகள் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்பிறகு, அவரை முதல்வராக்க எம்.எல்.ஏ-க்கள் சம்மதித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள், பல்வேறு வகையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவை முழுமையாக எங்களின் கைக்கு வந்துசேரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வாக்குறுதிகுறித்து பேசினால், அப்போதே அதை நிறைவேற்றிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். 

தினகரன்


  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 37 எம்.எல்.ஏ-க்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட முடிவுசெய்தோம். அப்போது, சில வாக்குறுதிகளை தினகரன் எங்களுக்குக் கொடுத்தார். தினகரனை ஆதரித்தவர்கள், மனம் மாறி, எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவினர். ஆனால், நாங்கள் 22 பேர் தினகரனை ஆதரிப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்தோம். அந்த சமயத்தில், முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் தினகரன் தெரிவித்தார். ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தினகரன் வெளிப்படுத்தியபோது, அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், தினகரன் அணியிலிருந்தவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கத் தொடங்கினர்.

தினகரனின் தீவிர விசுவாசியாக இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ., 'ஜெயலிலதா ஏற்படுத்திய இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டாம்' என்று கூறினார். ஆனால், தினகரனும் திவாகரனும் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார் ஜக்கையன். அப்போது அவர், எங்களில் சிலரிடம் பேசினார். 'ஆட்சியைக் கவிழ்க்க நாமும் உடந்தையாக இருந்தால், ஜெயலலிதாவின் ஆன்மா நம்மை மன்னிக்காது' என்று உருக்கமாக கூறினார். மேலும், எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சிக்கல் ஏற்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார். அந்தச் சமயத்தில்,  'ஆட்சி நம்முடைய கைக்கு வந்துவிடும். உங்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கிடைக்கும்' என்று தினகரனுக்கு நெருக்கமான எம்.எல்.ஏ., ஒருவர் எங்களிடம் கூறினார். இதனால், தினகரனைத் தொடர்ந்து ஆதரித்தோம். கொறடாவின் புகாரின்பேரில் சபாநாயகர் தனபால், 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்துள்ளார். இது, எங்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால், அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஒருவேளை, உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு பாதகமான தீர்ப்பு கிடைத்தால், நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும். நீதிமன்ற விசாரணை முடிந்து தீர்ப்பு கிடைப்பதற்குள், இந்த அரசின் பதவிக்காலம் முடிந்துவிட வாய்ப்புள்ளது. இதனால், புத்திசாலித்தனமான முடிவை எடுக்க சிலர் முன்வந்துள்ளனர். முன்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், எங்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிசெய்தனர். தற்போது, நிலைமை மாறிவிட்டது. நாங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள்மூலம் பேசிவருகிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்றனர். 

 கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சோர்வடைந்துள்ளதால், அவர்களிடம் தினகரன் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தினகரனிடம் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். அதற்கு, நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார். ஆனால், அவரது பேச்சை சிலர் ரசிக்கவில்லையாம். இதனால், கர்நாடக சொகுசு விடுதியிலிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களில் எட்டுப் பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

 'ஆட்சியும், அதிகாரமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. இது தவிர, டெல்லி மேலிடத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தினகரனை ஆதரித்த பழனியப்பனைக் கைதுசெய்ய போலீஸார் முயற்சி செய்தனர். ஆனால் அவர், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அடுத்து, செந்தில்பாலாஜிக்கு நெருக்கடிகொடுக்க வருமானவரிச் சோதனை தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதனால், செந்தில்பாலாஜி, அப்செட்டிலிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து, இன்னும் 10 பேரின் பெயர்ப் பட்டியலோடு தமிழக போலீஸாரும் வருமானவரித்துறையினரும் காத்திருக்கின்றனர். இதுபோன்ற நெருக்கடிகளைத் தவிர்க்கவும், பறிபோன எம்.எல்.ஏ., பதவியைப் பெறவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஐக்கியமாகும் மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்', தினகரனின் தீவிர ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்⁠⁠⁠⁠.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close