Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காமன்வெல்த் போட்டியில் 4 தங்கம் வென்ற காய்கனி வியாபாரி: கண்டுகொள்ளாத தமிழக அரசு!

காமன்வெல்த் சாதனை

காமன்வெல்த் பளுத்தூக்கும் போட்டியில் 4 தங்கப் பதங்கங்களை வென்றுள்ளார்., நெல்லையைச் சேர்ந்த காய்கனி வியாபாரியான ராமகிருஷ்ணன் என்ற அன்பு. அவரது சாதனையை தமிழக அரசு கண்டுகொள்ளாதபோதிலும் உள்ளூர் மக்கள் பாராட்டு விழா நடத்தி மகிழ்ந்தனர். 

நெல்லை டவுன் மார்க்கெட்டில் காய்கனி கடை நடத்தி வருபவர் ராமகிருஷ்ணன். 12 வயதில் பளுத்தூக்குதல் பயிற்சியைத் தொடங்கிய ராமகிருஷ்ணன், 1‌0 ஆண்டுகளாக மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்தார். திருமணத்துக்குப் பின்னர் விளையாட்டில் இருந்து விலகி இருந்த அவர், 20 வருடங்களுக்குப் பின்னர், கடந்த 3 வருடங்களாக தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

பாராட்டு

அதன் விளைவாக கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்தது. அதில் 74 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டிகளில் கலந்துகொண்ட அவர் 4 தங்கப் பதங்களை வென்று சாதித்து உள்ளார். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய அவரை தமிழக அரசு மட்டுமல்ல விளையாட்டுத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

அவரது சாதனை பற்றி அறிந்த நெல்லையின் முன்னாள் எம்.எல்.ஏ-வான மாலைராஜா, ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி அசத்தினார். முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைத்தின்கான், முன்னாள் மண்டல சேர்மன் சுப.சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ராமகிருஷ்ணனைப் பாராட்டி கெளரவித்தார்கள். இது பற்றி அவர் பேசுகையில், ’’குடும்பச் சூழ்நிலை காரணமாக ஐந்தாவதுடன் படிப்பை நிறுத்தி விட்டு சைக்கிள் கடையில் வேலை செய்தேன். ஆனாலும் எனக்குள் பளுத்தூக்கும் ஆர்வம் இருந்து வந்தது. அதனால் தனியாக பயிற்சி எடுத்தேன். ஐ.சி.எஃப்-ல் இருந்து ஓய்வு பெற்ற சேவியர் என்பவர் எனக்கு பளுத்தூக்கும் பயிற்சி கொடுத்தார். 

பாராட்டு விழா

எனது பயிற்சியாளரின் ஆலோசனையால் 1984 முதல் 1998 வரையிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறேன். தேசிய சாதனை, கின்னஸ் சாதனையும் படைத்தேன். கடந்த 3 வருடமாக மீண்டும் பிராக்டீஸ் செய்ததால் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிக்கு இந்தியா சார்பாக தேர்வானேன். இந்தியாவில் இருந்து 72 பேர் சென்றோம். தமிழகத்தில் இருந்து ஒரு பெண் உள்பட 7 பேர் சென்றோம். அதில் 5 பேர் தங்கப்பதக்கமும், 2 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்று திரும்பினோம். 

இதுவரையிலும் எனது சொந்தப் பணத்திலேயே இந்தப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். அரசின் உதவியை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அரசு ஊக்கம் அளித்தால் மட்டுமே இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறை மீது ஈடுபாடு ஏற்படும். அடுத்த வருடம் ரஷ்யாவில் நடக்கும் சர்வதேச பளுத்தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவேன்’’ என்கிறார், நம்பிக்கையுடன். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close