Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் அடி எடுத்து வைத்த அப்துல் கலாமின் கனவான “டிஜிட்டல் கிராமம்” திட்டம்..!

மதுரை மாவட்டம் கோட்டநத்தம்பட்டியில் ‘கலாம் டிஜிட் ஆல் ’ திட்டத்தை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கிவைத்தார். அங்குள்ள மக்களுக்கு கணினி பயன்பாடு, இணையப்பயன்பாடு பற்றி தன்னார்வலர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களால் கற்றுக் கொடுக்கப்பட்டது. 

கிராமப்புற மக்கள் அனைவரும் இணைய அறிவைப் பெற வேண்டும், அதன்மூலம் கிராமங்கள் டிஜிட்டல் கிராமங்களாக திகழ வேண்டும், அதற்கு அரசுத்துறையுடன் சேர்ந்து தனியார் அமைப்புகள் கிராமங்களுக்குச் சென்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்று 2015-ம் ஆண்டு கலாம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார். அந்த அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு மதுரை வந்த அப்துல் கலாம், மதுரை சேம்பர் ஆப் காமர்சின் கீழ் இயங்கிவரும் சேம்பர் பவுண்டேஷன் மூலம் டிஜிட் ஆல் என்ற அமைப்பைத் தொடங்கி வைத்தார். அவர்கள்தான் இத்திட்டத்தை கிராமங்களில் செயல்படுத்த உள்ளார்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் கலாம் டிஜிட் ஆல் திட்டம் தொடங்கப்பட்டது.

கலாம் டிஜிட்டல்

திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கலெக்டர் வீரராகவராவ், ''மக்கள் அனைவருக்கும் இணையஅறிவு சென்றடையவேண்டும் என்று  2015 ஜூலை 15ல் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூறியது தற்பொழுது நிறைவேறத் தொடங்கியுள்ளது. கலாம் நம்மிடம் ஒப்படைத்தப் பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக கோட்டநத்தம்பட்டியில் கலாம் அவர்களின் கனவு திட்டமான டிஜிட் ஆல் இன்று செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை  மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மடீட்சியா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், வங்கிகள் மற்றும் தொழில் துறைகளின் கூட்டு உதவியுடன் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நமது மாவட்டத்தில் நிறைய கிராமங்களில் மிக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் முக்கிய நோக்கமே  அனைவருக்கும் இணைய அறிவு கற்பிப்பதே ஆகும். நமது மாவட்டத்தில் தமிழகஅரசின், மத்திய அரசின் திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். பிரதமருடைய சிறப்பான செயல் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். பரிமாற்றம் செய்யக்கூடிய அனைத்து பரிவர்த்தனைகளும் இணையதளம் மூலம் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு மட்டும் அல்லாமல் அத்துடன் ஆதார் எண்களை இணைத்து மக்களுடைய பரிவர்த்தனைகள் அனைத்தும் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நலத்திட்டங்கள் சரியான நபருக்கு போய்ச் சேருகிறது.'' என்றார்.

கலாம்

இதைப்பற்றி நம்மிடம் விரிவாக பேசிய டிஜிட் ஆல் பயிற்றுநர்கள், “டிஜிட் ஆல் திட்டம் மூலம், இணையம், இணையத் தேடல்கள் மற்றும் இ.மெயில் பயன்பாடுகள், ஆன்லைன் மற்றும் மொபைல் மூலம் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை, டிக்கட் புக்கிங் செய்தல், ஸ்மார்ட் போன் பயன்பாடுகளும் பயனுள்ள ஆப்ஸ்கள், வாட்ஸ்அப், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள், ஆன்லைன் மூலம் பாதுகாப்பாக பொருள்களை வாங்குதல் மற்றும் விற்றல், அரசு இணையதளங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஆக்கபூர்வ பயன்பாடுகள் மற்றும் இன்டர்நெட் இடையூறுகளும் பாதுகாப்பு அம்சங்களும் குறித்து கிராம மக்களுக்கு விரிவாக கற்றுத் தந்து அவர்களது கிராமத்தை “கலாமின் டிஜிட்டல் வில்லேஜ்” ஆக மாற்றப்போகிறோம். இதை  ஒவ்வொரு கிராமமாக சென்று கற்றுத்தரப்போகிறோம், இதன்மூலம் இனி எந்த ஒரு கிராம மக்களும் இணைய வசதிகள்குறித்து அறியாதவராக இருக்க மாட்டார்கள்'' என்று தெரிவித்தனர்.

நல்ல திட்டம். மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close