Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சிமென்ட்ல பஸ்ஸ்டாப் கட்டுங்க பஸ்ஸை நிறுத்துறோம்...!” - கிராமத்தினரைத் தவிக்கவிடும் பேருந்து நிறுவனங்கள்

                   மகாதானபுரம்

ங்க ஊர்ல பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுங்க. அப்பதான் பஸ் நின்னு போகும்' என்று கவுன்சிலர் தொடங்கி முதல்வரின் தனிப்பிரிவு வரையிலும் மனுமேல் மனு எழுதிப் பார்த்துவிட்டார்கள் மகாதானபுரம் கிராம மக்கள். பயனில்லை. பின்னர், தாங்களே கைக்காசைப் போட்டு செலவு பண்ணி மூங்கில்களை ஊன்றி, பந்தல் போட்டு, அதில் கீற்றால் வேய்ந்து பேருந்து நிறுத்தமாக்கிவிட்டார்கள். அப்படி மக்களே கூரை பந்தல் பேருந்து நிறுத்தம் அமைத்து ஒரு வருஷம் கடக்க... பேருந்தின் நடத்துநர்களோ ''இதெல்லாம் செல்லுபடியாகாது. சிமென்ட்ல பஸ் ஸ்டாப் கட்டுங்க. அப்ப நாங்க உங்க ஊர்ல பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிட்டுப் போறோம்'' என்று அசால்ட்டாக சொல்ல, குமுறலின் உச்சத்தில் இருக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது மகாதானபுரம். 5,000 மக்கள் தொகை கொண்ட பெரிய ஊர் இது. தங்கள் ஊரில் பேருந்துகள் நின்று செல்லாததால், இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கரூர், திருச்சி என பக்கத்து நகரங்களுக்குச் சென்றுவர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மகாதானபுரத்தை ஒட்டியுள்ள மேற்கு மகாதானபுரம், பழஞ்சயபுரம், குப்பிட்டிப்பட்டி, சேபேங்கல், கம்மநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும் மகாதானபுரத்தில் வந்துதான் பஸ் ஏறிச்செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்புவரை இந்த வழியாகப் போகும் எல்லாப் பேருந்துகளும் இந்தக் கிராமத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லுமாம். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஓரிரு தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளைத் தவிர்த்து இதரப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், “மகாதானபுரத்தில் பஸ் ஸ்டாப் இல்லை. அதனால், பேருந்துகளை நிறுத்திச் செல்ல முடியாது” என்று கறாராக கூறிவிடுகிறார்களாம். 

மகாதானபுரம் கூரைப் பந்தல் பஸ் ஸ்டாப்பில், 'திருச்சி போக பஸ் கிடைக்குமா...' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகத்திடம் பேசினோம்...

ஆறுமுகம்"திடீர்னு கடந்த ரெண்டு வருஷமாதான் பேருந்து ஓட்டுநர்கள் பலர் பேருந்துகளை இங்கே நிறுத்தாம போய்டுறாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பிரச்னை வந்தப்பவே, கிராம முக்கியஸ்தர்களும் அப்போதைய இந்தத் தொகுதி எம்.எல்.ஏ, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய சேர்மன்,  ஊர் பஞ்சாயத்துத் தலைவர், கலெக்டர்னு பலரையும் பார்த்து மனு கொடுத்தோம். சி.எம்.செல்லுக்கும் கோரிக்கை மனு அனுப்பிவைத்தோம்.  'உடனே மகாதானபுரத்தில் பஸ்ஸ்டாப் அமைச்சு தருவோம்'னு சொல்வாங்க.

ஆனால், அந்த வாக்குறுதியை அனைவரும் சொல்லி வச்சாப்புல காத்துல பறக்க விட்டுடுவாங்க. நாங்களும் விடாம எல்லார்கிட்டயும் மனு கொடுத்துட்டு வந்தோம். இப்போ கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிற கீதா, தேர்தல்ல நின்னப்ப, 'என்னை ஜெயிக்க வச்சா, உங்க ஊருக்கு பஸ் ஸ்டாப்பை கண்டிப்பா கட்டித் தருவேன்'னாங்க. இதனால், பத்து கிராம மக்களும் அவருக்கு ஓட்டு போட்டு அவரை அமோகமா ஜெயிக்க வச்சோம். ஆனா, அவர் ஜெயிச்சதுக்கு அப்புறம் எங்களைக் கண்டுக்கலை. நாங்க நடையா நடந்து அவரைப் பார்த்துக் கேட்டா, 'இப்போ ஃபண்ட் இல்லை. ஃபண்ட் வந்தா கட்டித் தர்றேன்'னு மழுப்புறாங்க. 'எப்போ ஃபண்ட் வரும்?'னு கேட்டா, 'அத நீங்க கவர்மென்டுகிட்டதான் கேட்கணும்'னு வேண்டாவெறுப்பா பேசுறாங்க. கிருஷ்ணராயபுரம் ஒன்றிய சேர்மன்கிட்டயும் சொல்லிப் பார்த்தோம். யாருமே எங்களுக்கு பஸ் ஸ்டாப் கட்டித் தரலை. 

அதனால், வேற வழியில்லாம ஒரு வருஷத்துக்கு முன்னாடி நாங்களே மூங்கில் கழிகளை ஊன்றி, கீற்றால் கூரை போட்டு, கீற்றுப் பந்தல் பஸ் ஸ்டாப் அமைச்சோம். ஆனாலும்கூட பல பேருந்துகளை கண்டக்டர்கள் நிறுத்தலை. அந்தக் கீற்றுப் பந்தல் பஸ் ஸ்டாப்பும் ஐந்து மாசத்துல டேமேஜ் ஆயிட்டு. இரண்டு மாசமா சும்மா கிடந்துச்சு. இப்போதான் மூணு மாசத்துக்கு முன்பு புதிதாக மூங்கில் கழி, கீற்றுகள் வாங்கிப் புதிதாக கீற்றுப் பந்தல் பஸ் ஸ்டாப் அமைச்சுருக்கோம். சில பேருந்துகள்தான் கடமைக்கு நின்னுட்டுப் போகுது. அதிலயும், டிக்கெட்கள் ஃபுல்லா இருந்துச்சுன்னா, நிக்காம போய்டுவாங்க. நாங்க போய் அரசுப் பேருந்து, தனியார் பேருந்து டிரைவர்களைப் பார்த்துப் பேசுனதுக்கு, 'கீற்றுப் பந்தல் பஸ் ஸ்டாப்புக்கு எல்லாம் நாங்க பஸ்ஸை நிறுத்தமாட்டோம். சிமென்டால் பஸ் ஸ்டாப் கட்டுங்க. நாங்க பேருந்துகளை உங்க ஊரில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்கிட்டுப் போறோம்'ங்கிறாங்க. இதனால், சர்க்கஸ்காரங்க மாதிரி ஒவ்வொரு பஸ்ஸையும் நிறுத்தச் சொல்லி கையைக் காட்டி மறிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு டிமிக்கி கொடுத்துட்டு, சிட்டா பறந்துடுறாங்க. அதிகாரிகள்ட்ட தொடர்ச்சியா கோரிக்கை வச்சப்ப, இந்தக் கீத்துப் பந்தல் பஸ் ஸ்டாப்புக்கு முன்னாடி சாலையில் தற்காலிகத் தடுப்புகளை வைத்துப் பேருந்துகளை நின்னுபோக வழி பண்ணினாங்க. ஆனால், அதையும் கண்டுக்காமப் பேருந்துகள் நிக்காமப் பறக்குதுங்க. சாலைத் தடுப்புகளை வைத்து தற்காலிகமா பிரச்னையை முடிக்கிறதுக்கு பதிலா, பஸ் ஸ்டாப் கட்டிக் குடுக்கலாம். ஆனால், எங்க கஷ்டம் யாருக்கும் பெருசா தெரியலை. எங்க ஊருக்கு உடனே பஸ் ஸ்டாப் கட்டிப் பேருந்துகள் நின்னு போக வழி பண்ணலன்னா, மிகப்பெரிய சாலைமறியல் போராட்டத்தை நடத்துவோம்" என்றார் அதிரடியாக.

கம்மநல்லூரைச் சேர்ந்த பாப்பா, “பஸ் புடிக்கிறதே எங்களுக்குப் பெரும்பாடா இருக்கு. கருக்கல்ல நமக்கு அசலூர்ல சோலி இருக்குன்னு வையுங்க, சாயந்திரமேபாப்பா வந்து பஸ்ஸூக்காகக் காத்திருக்கணும். ஒரு அவசர ஆத்திரத்துக்கு பஸ் ஏறி வெளியூர் போக முடியலை. பத்து கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைங்க பள்ளிக்கூடம், காலேஜுனு குளித்தலை, திருச்சி, கரூர்னு போய் படிக்குதுங்க. பஸ் வசதி இல்லாததால், சைக்கிள், ஸ்கூட்டர்ல அழைச்சுட்டுப் போய், அஞ்சு கிலோமீட்டர்ல உள்ள லாலாபேட்டையில் பஸ் ஏத்திவிட வேண்டியதாயிருக்கு. ஒரு நோயாளியை அவசரத்துக்கு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போக முடியலை. ஒரு பஸ் ஸ்டாப் இல்லாததால்தான், இவ்வளவு பிரச்னையும். அதனால், உடனே இங்க பஸ் ஸ்டாப் கொண்டு வந்து எங்க பிரச்னையைத் தீருங்க சாமீகளா... உங்களுக்குப் புண்ணியமாப் போவும்" என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்.

கீதா

இதுசம்பந்தமாக கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதாவிடம் பேசினோம்.

"மகாதானபுரத்தில் பஸ் ஸ்டாப் கட்ட எம்.எல்.ஏ நிதியில் ஃபண்ட் ஒதுக்கி, அதுசம்பந்தமான ஃபைலை அனுப்பிவிட்டேன். கரூர்ல எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடப்பதால், இன்னும் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்படாமல் லேட்டாகலாம். விரைவில் பஸ் ஸ்டாப் கட்டும் பணி தொடங்கப்படும். அங்கே கீற்றுப் பந்தல் அமைத்து மக்கள் பஸ் ஸ்டாப்பா யூஸ் பண்றாங்கங்கிறது நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close