Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூய்மைப் பள்ளிகளுக்கான விருதை வென்று அசத்திய 8 அரசுப் பள்ளிகள்!

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது. பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் நிலை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பல முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றிபெற்று வருகிறார்கள். அந்தவகையில் அரசுப் பள்ளிகளின் தூய்மையை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இடையிலான தூய்மைப் பள்ளிப் போட்டியை அறிவித்தது. தமிழகத்திலிருந்து பல பள்ளிகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

பள்ளியில் உள்ள கழிப்பிட வசதியும் அதன் தூய்மையும், குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கான கழிப்பிட வசதி. தண்ணீர் வசதி, மாணவர்களின் சுய தூய்மை, பள்ளி வளாகத் தூய்மை போன்ற பல பிரிவுகளின் சோதனைகள் நடைபெறும். தேசிய, மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் பள்ளிகளுக்குச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். முதல் சுற்றுப் போட்டியின் முடிவில், தமிழகத்திலிருந்து 25 பள்ளிகள் அடுத்து நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. சுமார் 75 பள்ளிகள் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளன. அதில் 3 பள்ளிகள், தேனி மாவட்டத்தில் இருந்து தேர்வாகியுள்ளன. மேலும், மாநில அளவில் தேர்வான 3 பள்ளிகளோடு சேர்ந்து மொத்தம் 8 பள்ளிகள் மாவட்ட அளவில் வெற்றிபெற்றுள்ளன.

தேனி மாவட்டத்திலிருந்து மாநில அளவில் வெற்றி பெற்ற மூன்று பள்ளிகளில் முதல் இடத்தில் இருக்கும் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் பால்ராஜிடம் பேசினோம். ``மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குறியது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் தூய்மை குறித்த ஓர் விழிப்பு உணர்வை இந்தப் போட்டி மூலம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. எங்கள் பள்ளியைப் பொருத்தவரை 110 மாணவர்கள் படிக்கிறார்கள். என்னோடு சேர்த்து 7 ஆசிரியர்கள். எங்கள் பள்ளியில் மாணவர் பாராளுமன்றம் ஒன்று செயல்படுகிறது. இந்தப் பாராளுமன்றம் முழுக்க முழுக்க பள்ளியின் தூய்மை குறித்தே செயல்படும். மாணவர்கள் காலணி அணிந்து வருதல், சாப்பிடும் முன் சாப்பிட்ட பின் என இருமுறை கை கழுவுதல், பள்ளி வளாகத்துக்குள் குப்பை போடாமல் இருத்தல், ஒவ்வொரு மாணவ மாணவியரும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை, கவிதைப் போட்டிகள் வைத்தல் என மாணவர் பாராளுமன்றத்தின் வேலைகள் ஏராளம். வெறும் தீர்மானமாக மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்திக்காட்டியிருக்கிறோம். அதனால்தான் எங்களால் மாவட்டத்தில் முதல் இடம் பிடிக்க முடிந்தது.

வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் சுய தூய்மை பண்பை வளர்த்திருக்கிறோம். எங்கள் பள்ளி மாணவன் சாலையோரம் குப்பை கிடந்தாலும் அதை எடுத்து அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போவான். அதைத் தான் எங்கள் வெற்றியாகப் பார்க்கிறோம். இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடந்தால் மாணவர்களின் தரம் மேம்படும், சுய ஒழுக்கம் அதிகரிக்கும். வருங்காலத்தில் நல்ல உயரத்துக்குச் செல்வார்கள்`` என்றார் பெருமிதத்தோடு.

தலைமையாசிரியர் பீட்டர் பால்ராஜ் சொல்வதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பள்ளிகள்தான் எதிர்கால சமூகத்தைக் கட்டமைக்கிறது. பள்ளிகளில் கற்பிக்க வேண்டியது வெறும் அறிவார்ந்த சிந்தனை மட்டுமல்ல, சுய ஒழுக்கமும்தான். சுய ஒழுக்கம் உடைய ஒரு மாணவனால் மட்டுமே ஒரு நல்ல சமூகத்தைக் கட்டமைக்க முடியும். அப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவதில் அரசுப் பள்ளிகள் திறம்பட செய்துவருகின்றன என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close