Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் சிதைக்க காங்கிரஸ், பா.ஜ.க கைகோத்துள்ளன..!'' எடப்பாடி அரசை எச்சரிக்கும் அன்புமணி

காவிரி உச்சநீதிமன்றம் மோடி ஜெயலலிதா

Chennai: 

''காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைச் சிதைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒன்றாகக் கைகோத்துச் செயல்படும் நிலையில், இதைத் தமிழக அரசு திறமையாகச் செயல்பட்டு முறியடிக்க வேண்டும். பதவியைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரிப் பிரச்னை தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களின் கூடுதல் வாதங்களை எழுத்துமூலம் தாக்கல்செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து, கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனுடன் டெல்லியில்  கலந்தாய்வு நடத்திய கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், 'நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளவாறு, தமிழகத்துக்கு காவிரியில் 192 டி.எம்.சி தண்ணீர் தர முடியாது' என்று கூறினார். மாறாக, ஆண்டுக்கு 100 டி.எம்.சி. முதல் 102 டி.எம்.சி வரை மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலும் என்றும், அதற்கேற்ற வகையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மாற்றியமைக்கும்படி உச்ச நீதிமன்றத்தைக் கோரப்போவதாகவும் பாட்டீல் தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்தின்மூலம் இரு உண்மைகள் வெட்ட வெளிச்சமாகிவிட்டன. முதலாவதாக, மேகேதாட்டு என்ற இடத்தில் 67.14 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கர்நாடகம், அந்த அணை கட்டப்பட்டாலும் நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கப்படவேண்டிய தண்ணீர், தடையின்றி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று இப்போது கூறுவதன் மூலம், தமிழகத்துக்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை என்பதும், அதற்காகத்தான் மேகேதாட்டு அணையை கர்நாடகம் கட்டுகிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு முன்வைத்த வாதங்களையும், இப்போது கர்நாடக அரசு முன்வைக்கும் வாதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மத்திய அரசு, கர்நாடக அரசு ஆகிய இரண்டின் வாதமுமே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை சிதைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.

அன்புமணி

காவிரிப் பிரச்னையைத் தீர்க்காமல் இழுத்தடித்துக்கொண்டே செல்ல வேண்டும்; தமிழகத்துக்கு ஒருபோதும் நீதி கிடைத்துவிடக்கூடாது என்பதுதான் கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இந்த அணுகுமுறை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசும் கர்நாடக அரசும் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் நோக்கத்தைக் கண்டறிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையில்லை. இதற்கெல்லாம் அரசியல்தான் காரணம் என்பதை அனைவரும் அறிவர். கர்நாடகத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என மத்தியில் ஆளும் பா.ஜ.கட்சியும் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸும் துடித்துக்கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அந்த இரு கட்சிகளும் தலைகீழாக நின்றாலும் எதையும் சாதிக்க முடியாது. எனவே, தங்களுக்குச் சாதகமான கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் தமிழகத்துக்கு துரோகம்செய்யவும் மத்திய அரசு தயாராகிவிட்டது. அதனால்தான், காவிரி பிரச்னையில் நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தது. கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸும் வழக்கமான காரணங்களுக்காக தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சிதைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் ஒன்றாகக் கைகோத்துச் செயல்படும் நிலையில், இதைத் தமிழக அரசு திறமையாகச் செயல்பட்டு முறியடிக்க வேண்டும். பதவியைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இந்த விசயத்தில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வழக்கில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கு, காவிரி தொழில்நுட்பக் குழுமூலம் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரம்குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும்''  என வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close