Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசிடம் கோரிக்கை மனு கொடுப்பது குற்றமா? கைது செய்யப்பட்ட விவசாயிகள் குமுறல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகக் கொடுக்க வந்தனர். அவர்களை போலீஸார் முதலில் தடுத்தும், அதன் பிறகு தலைவர்கள் நான்குபேரை மட்டும் அனுமதித்தனர். தலைவர்கள் உள்ளே சென்றவுடன், வெளியே நின்ற விவசாயிகளை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்ததுக்குப் கண்டனம் எழுந்திருக்கிறது.  

மயிலாடுதுறை அருகேயுள்ள மணல்மேட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்தசில ஆண்டுகாலமாகவே இந்த ஆலை நிர்வாகச் சீர்கேட்டில் சிக்கி நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. இதை மீண்டும் நல்லமுறையில் இயங்கவைக்க கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. எனவேதான், இந்தச் சர்க்கரை ஆலையில் 2017-18 ஆண்டுக்கான கரும்பு அரவையைத் தொடங்கிடவும் கடந்த மூன்று வருடங்களாகக் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கிடவும் தமிழ்நாடு விவசாயச் சங்கம் சார்பில் இன்று (27.09.2017) மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியல் செய்யப்போவதாக அறிவித்தது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.  

`சரி, சாலைமறியல் செய்யவில்லை. எங்கள் கோரிக்கைகளைக் கோட்டாட்சியரிடம் மனுவாகக் கொடுத்துவிட்டுச் செல்கிறோம்' என்று விவசாயச் சங்கத் தலைவர்கள் தங்க.காசிநாதன், துரைராஜன் ஆகியோர் சொன்னபோது, போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதில் தள்ளுமுல்லு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சுமார் 60 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதித்தது. அதன்பின் இறங்கிவந்த காவல்துறை, நான்கு பேர் மட்டும் உள்ளே சென்று கோட்டாட்சியரிடம் மனுகொடுக்க அனுமதி கொடுத்தது. தலைவர்கள் நான்கு பேர் உள்ளே சென்றவுடன், வெளியே நின்ற விவசாயிகளை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.   

கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த தங்க.காசிநாதன், துரைராஜன் ஆகியோர் தங்களுடன் வந்த அப்பாவி விவசாயிகள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டு திகைத்துப்போனார்கள். அவர்கள் காவல் ஆய்வாளர் அழகேசனிடம், `சார், நாங்களெல்லாம் விவசாயிகள்தான், தீவிரவாதிகள் அல்ல. நாங்க பாடுபட்டு விளையவச்ச கரும்புக்கு அரசு ஆலை பணம் கொடுக்கல, அதை அரசுக்கு எடுத்துச்சொல்லி எங்கவீட்டு அடுப்பு எரியதான் போராடுறோம். இதுக்கு நீங்க அனுமதி கொடுக்கல. ஏத்துக்கிட்டோம், நான்குபேர்தான் உள்ளே போகணும்னு சொன்னீங்க, அதையும் ஏத்துக்கிட்டோம். எங்கள உள்ளே அனுப்பிட்டு எங்களுடன் வந்த அப்பாவிகளைக் கைது செய்தது நியாயமா, இந்த அரசிடம் கோரிக்கை கொடுப்பதுகூடக் குற்றமா? விவசாயிகள் வயிறு எரிஞ்சா இந்தநாடு உருப்படாது. எங்களை மட்டும் ஏன் விட்டுவைச்சிருக்கீங்க, எங்களையும் கைது செய்யுங்கள்' என்று கூற மறுபேச்சில்லாமல் அவர்களையும் கைதுசெய்து கொண்டுசென்றனர் போலீஸார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close