Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தரைதட்டி நிற்கும் கப்பலை மீட்கும் பணியில் தாமதம் ஏன்?

கோடியக்கரை அருகே கடல் சேற்றில் சிக்கித் தவிக்கும் மண்வாரி கப்பலை மூன்று நாள்களாகியும் மீட்க முடியாமல் தவிக்கின்றனர். அதில் பணிபுரியும் 9 ஊழியர்களும் கப்பலைவிட்டு கரைக்கு வரவும் மறுக்கின்றனர்.  

நாகை  மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல் பகுதியில் கடந்த 25-ம் தேதி ஒரு கப்பல் தரைதட்டி நின்றது.  அக்கப்பலில் இருந்தவர்கள் மேல்தளத்தில் இருந்தபடி கரையைநோக்கி கையசைத்து உதவி கேட்டனர்.  இதை அறிந்த போலீஸார் மற்றும் கடலோர காவல் படையினர் அக்கப்பலுக்குச் சென்று விசாரித்துள்ளனர்.  

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ''ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் கடலில் மண்வாரும் பணியை செய்துவந்தது இக்கப்பல். இதில் திடீரென பழுது ஏற்படவே அதை சென்னைக்குக் கொண்டுசென்று பழுது நீக்கியுள்ளனர். திரும்பி மண்டபம் வரும் வழியில்தான் அக்கப்பல் கோடியக்கரை அருகே தரைதட்டி நின்றுவிட்டது. அதில் 9 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களை கரைக்கு வருமாறு போலீஸார் அழைக்க, அவர்களோ 'தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கப்பலில் இருப்பதால் நாங்கள் இங்கேயே தங்கிக்கொள்கிறோம்' என்று கூறிவிட்டனர்.  மீட்புப் பணிக்காக கப்பல் நிற்கிறது' என்றார்கள்.

இரண்டாம் நாளான நேற்று உள்ளூர் விசைப்படகுகள் மூலம் மீட்புப் பணியை மேற்கொண்டனர். அக்கப்பல் தரைதட்டி நிற்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. தூரத்துக்கு சேறாக இருப்பதாலும், ஆழமான சேற்றில் கப்பல் சிக்கிக்கொண்டதாலும் மீட்க முடியவில்லை. நாகையிலிருந்து மீட்புப் பணிகளுக்குரிய இரண்டு விசைப்படகுகளை வரவழைத்து கப்பலை மீட்க முடிவு செய்திருக்கிறார்கள்.  

குஜராத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான இக்கப்பல் 2005ல் கட்டப்பட்டதாகும். 336 டன் எடையும், 45 அடி நீளமும் கொண்ட இக்கப்பலின் உரிமம் 2015ல் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் தனது பயணத்தை நிறைவுசெய்ய இருக்கிறது இக்கப்பல். வாழ்நாளின் இறுதிகட்டத்தில்தான் தரைதட்டி நிற்கிறது. மூப்பு வந்தால் தடுமாறும் நிலை மனிதருக்கு மட்டுமல்ல கப்பலுக்கும்தான் போலும்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close