Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில்வே அதிகாரியை அசுத்தமான தண்ணீரைக் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்திய ஹெச்.ராஜா தலைமையிலான குழு

தூய்மை இல்லாத தண்ணீரைக் குடிக்கச் சொல்லி திருச்சி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரை ஹெச்.ராஜா தலைமையிலான குழு கட்டாயப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரயில் பயணிகள் வசதி மேம்பாட்டுக் குழுவின் தலைவரான எச்.ராஜா தலைமையில், வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி மற்றும் ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் 13 உறுப்பினர்களைக்கொண்ட குழுவினர், கடந்த சில தினங்களாகச் சென்னை சென்ட்ரல், தாம்பரம், செங்கல்பட்டு, திருச்சி, காரைக்குடி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் போது, ரயில் பயணிகளின் குறைகளை, கோரிக்கைகளை இந்தக் குழு கேட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று இந்தக் குழு, திருச்சி ரயில் நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தது. 6-ஆவது நடைமேடையில் பயணிகளுக்கான குடிநீர்க் குழாயில் வந்த நீரை ஆய்வு செய்தனர்.

அப்போது, குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வந்ததைக் கவனித்த ஆய்வுக் குழுவினர், திருச்சி ஸ்டேஷன் மாஸ்டர் ஶ்ரீராமை அருகில் அழைத்து, அந்த நீரைக் குடிக்கக் கூறினர். சட்டென அந்தத் தண்ணீரைக் குடித்த ஸ்டேஷன் மாஸ்டர் அதை வெளியில் துப்பினார். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் குழுவின் உறுப்பினர் இர்ஃபான் அகமது, ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீராமின் தலையை அழுத்தியதுடன், அசுத்தமான குடிநீரைக் குடிக்கக் கட்டாயப்படுத்தினார். அதற்கு ஶ்ரீராம் உடன்பட மறுத்தார். சட்டெனக் கோபமான ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள், இது என்ன குடிநீரா? அல்லது கழிவறை நீரா ? எனக் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பதில் சொல்ல முடியாமல் ஶ்ரீராம் அங்கு நின்றார்.

அடுத்து அந்தக் குழு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டி, பயணிகள் பாதுகாப்பு அறை எனப் பலவற்றில் ஆய்வு செய்தனர். மேலும் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் இருந்த கழிவறை மிக மோசமாக இருந்ததைப் பார்த்த எச்.ராஜா, திருச்சி ரயில்வே ஜங்ஷன் அதிகாரிகளைக் கடுமையாகத் திட்டினார்.

மேலும், தமிழகத்திலேயே திருச்சி ரயில் நிலையத்தில்தான், பிளாட்பாரம் டிக்கெட் தொகை அதிகம் என்றும், ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களை இலவசமாக ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேட்டரி காருக்குத் தற்போது 30 ரூபாய் விலை வசூலிக்கப்படுவதாகவும், பயணிகளின் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகளும் இயங்குவதில்லை உள்ளிட்ட பல குறைகளை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் ஆய்வுக்குழுவிடம் முறையிட்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “ரயில் நிலையங்களின் தரத்திற்கு ஏற்ப பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் சுகாதாரம் எவ்வாறு பேணப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். திருச்சி ரயில் சந்திப்பைப் பொறுத்தவரை எந்தப் புகார் என்றாலும் அது ரயில்வே போர்டில் பேசி சரி செய்யப்படும். மேலும், அவரிடம் சுப்பிமணியசாமி உங்களை முன்னாள் எம்எல்ஏ என்று கூறிவருகின்றாரே என்ற கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, 'இதை சர்ச்சை ஆக்கி இருப்பவர்கள் அரசியல் அறிவில்லாமல் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் உள்நோக்கத்துடன் செய்திருக்க வேண்டும். எனவே இது என் தவறும் இல்லை, சுப்பிரமணியசாமி தவறும் இல்லை. நான் மாநில அரசியலுக்குத் திரும்புவது என்பது கட்சித் தலைமை முடிவு செய்ய வேண்டிய விசயம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக இதுவரை மத்திய அரசு 1,800 கோடி ரூபாய் வழங்கியுள்ளது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close