Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயக்க நிலையில் ஜெயலலிதா... சரமாரியாக சந்தேகமும் கேள்வியும் எழுப்பும் மு.க.ஸ்டாலின்

மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா காவிரி பற்றி ஆலோசித்ததாக அரசு கூறியது எப்படி என்றும், இல்லத்தில் மயங்கிக் கிடந்தவரை தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றது ஏன் என்றும் சந்தேகமும் கேள்வியும் எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஜெயலலிதா நலமாக இருக்கிறார், இட்லி சாப்பிட்டார் என்று அமைச்சர்கள் மாறி மாறி கூறிவந்தனர். இந்தச் சூழ்நிலையில் 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர் 2016, டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கினார். சசிகலா தலைமையில் ஓர் அணி செயல்பட்டு வந்தது. இதனிடையே, சசிகலா சிறைக்குச் சென்றதும் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி அணியுடன் கைகோர்த்தார். இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே, "ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபோது  நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்க விடவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாக, அவர் இட்லி சாப்பிட்டதாக  அப்போது பொய் சொன்னோம். அதற்கு, இப்போது உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல்செய்த மர்மம் என்ன எனத்தெரியவில்லை" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா எந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது அடங்கிய நோயாளி நலன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவுக்குத் தேவையான முதல் உதவி சிகிச்சையை மருத்துவக் குழுவினர் செய்துள்ளனர். 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140/100 ஆகவும் சாப்பிடுவதற்கு முன்பு 100 எம்.ஜி.க்குள்ளும் சாப்பிட்ட பின்பு 140 எம்.ஜி.க்குள்ளும் ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு 508 எம்.ஜி ஆகவும் இருந்தது. மேலும் ஜெயலலிதா உடலில் எந்தவித காயமோ, புண்ணோ இல்லை" என்று வெளியான நோயாளி நலன் அறிக்கையில் இருந்தது. சில மாதங்களாக அடங்கியிருந்த ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் தேவையில்லை என்றும் சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா காவிரி பற்றி ஆலோசித்ததாக அரசு கூறியது எப்படி என்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்து எப்படி ஆலோசித்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இல்லத்தில் மயங்கிக் கிடந்தவரை தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றது ஏன் என்று வினா எழுப்பிய மு.க.ஸ்டாலின், உயர் பாதுகாப்பிலுள்ள ஜெயலலிதாவின் வீட்டில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இல்லையா என்றும் சர்க்கரை பாதிப்பு அதிகரித்தது பற்றி கூறாமல் காய்ச்சல் என அறிக்கை வெளியிட நிர்பந்தித்தது யார் என்றும் வினா எழுப்பினார்.

பதவி ஆசை காரணமாகத்தான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்வதாக அடிக்கடி தெரிவிக்கப்பட்டதா என்று சந்தேகம் எழுப்பிய மு.க.ஸ்டாலின், ஆளுநரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என அமைச்சர் கூறியது பற்றி ஆளுநர் மாளிகையின் பதில் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close