Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேராசிரியர் ஜெனிஃபா மீதான கத்திக்குத்து தாக்குதலின் பின்னணி என்ன?

Chennai: 

மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியை ஜெனிஃபா மீது, கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்ட ஜோதிமுருகன். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த பேராசிரியை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

பேராசிரியர்

இந்தச் சம்பவம்குறித்து, பேராசிரியர் அ.மார்க்ஸ் தன்னுடைய கருத்தை முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரிடம் பேசியபோது “இந்தக் கத்திக்குத்துச் சம்பவம், கண்டிக்கப்படவேண்டிய செயல். கத்தியால் குத்திய அந்த ஆசிரியர் உரிய தண்டனை பெற வேண்டும். ஆணாதிக்கத் திமிரும் இதற்கு ஒரு காரணம். பிரச்னைகள், மிகவும் சிக்கலானவை; பன்முகப் பரிமாணங்கள்கொண்டவை. எளிமையான புரிதல்கள், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்குத்தான் இட்டுச் செல்லும். இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் உரிய தீர்வுகளைக் காணும்போது எல்லாவற்றையும் யோசித்தாக வேண்டும்” என்றவர், பிரச்னைகளுக்கான காரணிகளையும் பட்டியலிட்டார். 

பேராசிரியர் மார்க்ஸ்“எனக்குத் தெரிந்த அரசுக் கல்லூரி ஒன்றில், 164 ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதில் 46 பேர்தான் UGC ஊதியம் பெறும் நிரந்தரப் பணியாளர்கள். நான்கு ஆசிரியர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அங்கு வந்தவர்கள். மற்ற 113 ஆசிரியர்கள், ‘Guest Lecturer’ எனப்படும் தற்காலிக விரிவுரையாளர்கள். 

மூத்த ஆசிரியருக்கான ஊதியம் ஒன்றரை லட்சம் ரூபாய். இதுதவிர, தேர்வுப் பணிகள் மூலம் பெறும் வருமானம் வேறு. எல்லாவிதமான அரசுச் சலுகைகள், ஊதிய/பதவி உயர்வுகள், விடுப்பு வசதிகள் என அனைத்தும் உண்டு. ஆனால், தற்காலிக விரிவுரையாளர்கள் ஒரே மாதிரியான கல்வித் தகுதி உடையவர்கள்தான் என்றாலும், அவர்களுக்கு நிரந்தர ஆசிரியரைவிட பல மடங்கு கூடுதல் வேலை உண்டு. ஆனால், தற்காலிக விரைவுரையாளருக்கான மாத ஊதியம் 15,000 ரூபாய் மட்டுமே. மாதம் ஒருநாள் விடுப்பு எடுக்கலாம். ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் (கோடை விடுமுறையில்) ஊதியம் கிடையாது.

தற்காலிக விரிவுரையாளர்கள் மீண்டும் பணிபெறுவது என்பதெல்லாம் ஆங்காங்கே உள்ள கல்லூரி முதல்வர், துறைத் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது. இந்தப் பணிநியமனத்தில் மட்டுமல்ல, தினந்தோறும் அவர்களுக்கான பணிப்பங்கீடுகளிலும் எல்லாவிதமான சுரண்டல்களையும் அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். 

வேலைக்குரிய ஆணை இருந்தால் அதை வைத்து நாம் உரிமை கோருவோம் என்பதால், அதைத் தருவதில்லை. guest lecture என்பது, சுரண்டலின் உச்சபட்சமான வடிவம் மட்டுமல்ல; ஆகப்பெரிய அறக்கேடு. ஆசிரியர்களை இரு வர்க்கங்களாகப் பிரித்து, ஒரே வேலைக்கு இரண்டு ஊதியங்களை நிர்ணயித்து லாபம் பார்த்ததுடன், ஆசிரியர்கள் போராடத் திராணியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்" என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

மதுரைப் பல்கலைக்கழக நிகழ்வு குறித்து நெட் செட் அசோசியேஷன் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாகராஜன், ``மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை இரண்டு வகைகளாகப் பார்க்கலாம். ஒன்று, தாக்குதல் நடத்தியவர் ஆராய்ச்சி மாணவராக இருந்திருக்கிறார். இரண்டாவது, தற்காலிக விரிரையாளராகவும் பதவி வகித்திருக்கிறார்.  

பேராசிரியர் நாகராஜன்2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு, `அனைத்து பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி மாணவர்கள் சேர்க்கை குறித்து தெளிவான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்' என அறிவித்திருக்கிறது. ஆனால், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இதுவரை எந்த விதிமுறையையும் கடைப்பிடிக்காமல்தான் மாணவர்களைச் சேர்த்துவந்திருக்கிறது. குறிப்பாக, பேராசிரியர்களுக்குப் பிடித்த மாணவர்களை மட்டுமே சேர்த்திருக்கிறது. இவர்களுக்கு ஆராய்ச்சிப் பணி தவிர, இதர வேலைகளைக் கொடுத்து நோகடிக்கிறார்கள்.

இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்குத் தரும் மரியாதைகூட இவர்களுக்குத் தருவதில்லை. அதுவும், ஒரு பேராசிரியரிடம் மாணவராக இருந்துகொண்டு மற்றொரு பேராசிரியரிடம் பணி செய்யும்போது அதிக அளவிலேயே கொடுமைசெய்வார்கள். ஆராய்ச்சிப் பணியில் இருப்பவர்கள் அதே துறையில் கெளரவ விரிவுரையாளராக இருந்தால், என்ன வேலை சொன்னாலும் செய்தாக வேண்டும். செய்ய முடியாது என்றால், கெளரவ விரிவுரையாளர் பணிக்கும் ஆபத்து, ஆராய்ச்சி பணிக்கும் ஆபத்து. 

ஜோதிமுருகன், ஆரம்பத்தில் கெளரவ விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்திருக்கிறார். ஆனால், அவர் பணியிலிருந்து நின்ற பிறகும் அலுவலகப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இதுவும் சரியானதாக இல்லை. கெளரவ விரிவுரையாளரை நியமிக்கும்போது எந்த விதிமுறையையும் பின்பற்றுவதில்லை. நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் சொல்லும் வேலையை தட்டாமல் செய்ய வேண்டும் என்பதை, சொல்லப்படாத விதிமுறைகளில் ஒன்றாக வைத்திருக்கிறார்கள். `வேலையைச் செய்ய முடியாது' எனச் சொன்னால் பிரச்னைதான். இதனால் கூடுதல் மன அழுத்தம்தான் அவர்களுக்கு உருவாகும். தமிழ்நாட்டில் தற்போது 5,000-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகிறார்கள். இனியாவது உயர்கல்வித் துறையும் பல்கலைக்கழகங்களும் சரியான விதிமுறைகளைப் பின்பற்றி, ஆராய்ச்சி மாணவர்களையும் கெளரவ விரிவுரையாளர்களையும் நியமிக்க வேண்டும்" என்கிறார் நாகராஜன்.

உயர்கல்வித் துறையும் பல்கலைக்கழகமும் விழித்துக்கொண்டால் நல்லது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close