Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாஞ்சில் நாட்டுக்கு நான்கு முறை காந்தியை வரவைத்த கன்னியாகுமரி!

மகாத்மா காந்தியை இந்தியா முழுவதும் பயணம் செய்யச் சொல்லி இருக்கிறார் கோகலே. ஆனால், 1925-ம் ஆண்டுவாக்கில்தான், காந்தியால் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வர முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பத்து ஆண்டுகளில் காந்தியிடம் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. அந்த மாற்றங்களோடுதான், தென் திருவிதாங்கூர் நாஞ்சில் நாட்டுக்கு வந்தார் காந்தி. பிரிட்டிஷ் இந்தியா பகுதிகளிலேயே தன் பிரசாரத்தை காந்தி வைத்துக்கொண்டிருந்தாலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரிக்குச் செல்லவேண்டும் என்கிற ஆசை அவருக்கு மனதில் இருந்திருக்கிறது. அந்த ஆசையை அவரே வெளிப்படுத்தியுள்ளார். இதனால் நான்குமுறை கன்னியாகுமரிக்குப் பயணம் செய்தார். முதல்முறையாக நாஞ்சில் நாட்டுக்கு காந்தி வந்தபோது மக்கள் அவரை தெய்வமாகவே பார்த்தனர்.

1925-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி சனிக்கிழமை தென் திருவிதாங்கூர் பகுதிக்கு காந்தி வந்தார். வைக்கம் போராட்டக் களத்துக்குச் சென்றுவிட்டு, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்கு மதியம் வந்துசேர்ந்தார். அங்கு பிரிட்டிஷ் ரெசிடென்சியல் விடுதியில் ஓய்வெடுத்தார். இந்தமுறை அவர் திருவிதாங்கூர் சமஸ்தான விருந்தினராக வந்திருந்ததால் சமஸ்தான அதிகாரிகள் அவருக்கு வேண்டியவற்றை செய்து ஆதரவு அளித்தனர். அன்று மாலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாத்தை மட்டும் சுற்றி வந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பொறுத்தவரை, கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களை கோயில்களில் அனுமதிக்கும் வழக்கம் இல்லை. எனவே, காந்திக்கு கோயிலில் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. அதன் பின்னர் சூரியன் மறையும் வேளையில் கன்னியாகுமரி தீர்த்தக்கட்டத்தில் தன்னை மறந்து நீராடினார். நவஜீவனில் கன்னியாகுமரியில்  நீராடிய காட்சியை 'கன்னியாகுமரியில் தரிசனம்' என்கிற தலைப்பில் காந்தி எழுதியிருக்கிறார். அன்று இரவு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்தி பேசினார். அப்போது டாக்டர் நாயுடுவின் முயற்சியால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகர்கோவில், சுசீந்திரம் ஆகிய ஊர்களில் உள்ள மக்களின் சார்பாக காந்திக்கு பணமுடிப்பு கொடுக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து காந்தி மீண்டும் திருவனந்தபுரம் சென்றார்.


இரண்டாவது முறையாக 1927-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி காந்தி நாகர்கோவில் வந்தார். இந்த முறை திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நாகர்கோவில் நகராட்சி சார்பில் நகராட்சி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு பற்றி காந்தி பேசினார். "எந்த அர்ச்சகர்கள் சமயத்தின் உண்மையான பாதுகாவலர்களாக இருந்தார்களோ, அவர்களே அச்சமயத்தைத் தகர்ப்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பது வருந்தத்தக்க வரலாற்று உண்மை" என்றார் காந்தி. அந்தக் கூட்டத்தில் கிடைத்த நகைகள் ஏலம் விடப்பட்டன. இந்தமுறை கோட்டாறு பெருமாள் பணிக்கர் வீட்டில் காந்தி தங்கினார்.

மூன்றாவது தடவையாக 1934-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அங்கு வந்தார் காந்தி. இந்தமுறை சென்னை - மைசூர் - மலபார் வழியாக திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து நாகர்கோவில் வந்தார். அங்குள்ள ஜவஹர் மைதானத்தில் காந்தி பேசினார். அந்தக் கூட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். முதல்தடவை காந்தியை விருந்தினராக உபசரித்த திருவிதாங்கூர் சமஸ்தானம், மூன்றாம்முறை நடந்த காந்தியின் கூட்டத்துக்கு மக்கள் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. "காந்திக்கு வரவேற்பு கொடுக்கக் கூடாது; பணம் திரட்டிக் கொடுக்கக் கூடாது" என அரசு ஊழியர்களுக்கு திருவிதாங்கூர் அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதை நாஞ்சில் நாட்டில் அதிகாரிகள் படித்துக் காட்டினர். அந்தக் கூட்டத்தில் அரிசன மக்கள் சார்பாகவும். இந்திப் பிரசார சபை சார்பாகவும் வரவேற்புரை படிக்கப்பட்டது. நிதி கொடுக்கப்பட்டது. மறுநாள் கன்னியாகுமரிக்குச் சென்ற காந்தி அருணாசல பண்டாரம் சத்திரத்தில் தங்கினார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் கடலில் நீராடினார். கடல் அலைகள் காலில் வந்து படுமாறு கடற்கரையில் மக்களோடு நடந்தார். அதன்பின் திருநெல்வேலி வழியாக திரும்பிச் சென்றார். இந்த முறை கன்னியாகுமரி பயணத்தின்போது காந்திக்கு உதவியாக இருந்தது மீராபென்.


நான்காவது முறையாக 1937-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வைக்கம், அருவிக்கரை வழியாக நாகர்கோவிலுக்கு காந்தி வந்தார். நாகராஜா கோயிலுக்கு காந்தி அழைத்துச் செல்லப்பட்டார். அன்று மாலை எஸ்.எல்.பி பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது நாஞ்சில் நாட்டில் நல்ல மழை. அதையும் பொருட்படுத்தாமல் காந்தியின் உரையை மக்கள் கேட்டனர். அந்த கூட்டத்தில் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பாலராமவர்மா, அரிசனங்களுக்கு இந்து ஆலயங்களில் நுழைய அனுமதி கொடுத்ததை மனம் திறந்து பாரட்டினார். 'நான் இந்த பிரகடனத்தால்தான் ஆலயம் செல்ல முடிகிறது. இதனால் மகிழ்ச்சியுடன் இங்கிருந்து செல்கிறேன்' என்றார். கூட்டம் முடிந்ததும் அரிசனங்களுடன் அமர்த்து பழம் சாப்பிட விரும்பினார். கற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்களுடன் அமர்ந்து பழங்கள் சாப்பிட்டார்.

மறுநாள் காலை, நாகர்கோவில் அரிசன சேவா சங்கத்தினர் பஜனை பாடி வர, பெருங்கூட்டத்தினருடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நுழைந்தார். அன்று காந்தி மௌன விரதம். எனவே, விவேகானந்தா நூல் நிலையத்துக்குச் சென்றார். பின்னர் சுசீந்திரம் வந்த காந்திக்கு உயர்நிலைப் பள்ளியின் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பள்ளி நாட்குறிப்பில் தமிழில் கையெழுத்துப் போட்டுவிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குள் அரிசன மக்களுடன் சென்றார். அதன்பின் இரவு 7.30 க்கு திருவனந்தபுரம் சென்றார். இந்த பயணத்துக்குப் பின் காந்தி, நாகர்கோவிலுக்கு வரவில்லை. அவரது அஸ்திதான் வந்துசேர்ந்தது.

காந்தி நாஞ்சில் பகுதிக்குச் சென்ற ஒவ்வொரு முறையும் பல மாறுதல்களை  காந்திக்குக் கொடுத்தது. கன்னியாகுமரியின் அடையாளம் பகவதி அம்மன் கோயில்தான். ஆனால், அக்கோயிலுக்குள் காந்தியை அனுமதிக்கவில்லை. பின்னாளில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் அருகில்தான் அனைவரும் சென்று பார்வையிடும் இடமாக காந்தி நினைவு மண்டபம் கட்டப்பட்டு, இன்றளவும் கம்பீரமாகத் திகழ்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close