Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணல் குவாரி தொடர்பான வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

 

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அந்த  மனுவில்,  'தமிழகத்தில் மணல்  விற்பனையை அரசே ஏற்று நடத்திவருகிறது. அந்த வகையில், பொதுப் பணித்துறையினர் மணல் விற்பனையில் இரண்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று, ஆன்லைனில் பொதுமக்களே மணல் வேண்டி பதிவுசெய்வது. இதில், மணல் லாரிகளின் பதிவு நம்பரை அதன் உரிமையாளரின் அனுமதியுடனும், மணலின் மதிப்புக்கான வரைவோலையுடனும் பதிவு செய்ய வேண்டும். மற்றொன்று, லாரி உரிமையாளர்கள் மணல் வேண்டி பதிவுசெய்வது. இந்த முறையில், லாரி உரிமையாளர்கள் லாரியின் பதிவு நம்பர் மற்றும் தேவையான மணலுக்கான தொகையின் வரைவோலை ஆகியவற்றைப் பதிவுசெய்ய வேண்டும். சாதாரணமாக, பதிவுசெய்த நாளிலிருந்து 10 நாள்களில் மணல் வழங்கப்படும். அதற்கான குறுஞ்செய்தியைப் பதிவுசெய்தவர்களின் எண்ணுக்கு அதிகாரிகள் அனுப்பிய 36 மணி நேரத்தில், மணலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பதிவு ரத்துசெய்யப்பட்டுவிடும்.

இந்நிலையில், மணலை எடுத்துச்செல்லும் லாரி உரிமையாளர்கள், மணல் எடுப்பதற்காகக் காத்திருக்கும் நாள்களில், நாளொன்றுக்கு 1,400 ரூபாயைப் பதிவுசெய்த நாளிலிருந்து, மணலை வழங்கும் நாளில் கிலோ மீட்டருக்கு 70 ரூபாயை கட்டணமாக வழங்க வேண்டுமெனவும் கூறுகின்றனர்.  இதனால் பொதுமக்கள் மணலுக்கான விலையின்றி கூடுதலாக 14 ஆயிரம் முதல் 69 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தவேண்டிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். ஆன்லைனில் மணல் வேண்டி பதிவுசெய்ய, லாரிகளின் பதிவு எண் கட்டாயம். இல்லையெனில், பொதுமக்களால் மணலை வாங்க இயலாது. ஆன்லைனில் பதிவு செய்யும் முறை காரணமாக லாரி உரிமையாளர்கள் மணலின் விலையை நிர்ணயம் செய்கின்றனர். பிற மாநிலங்களுக்கு மணல் கடத்துவதற்கு இம்முறை வாய்ப்பாக அமைகிறது.  ஏற்கெனவே இதுகுறித்த வழக்கொன்றில், மணல் விற்பனையைக் கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டுமென 2010-ல் மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், 7 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவுப்படி  மணல் குவாரி மற்றும் விற்பனையைக் கண்காணிக்க, மாநில அளவிலான கண்காணிப்புக்குழுவை உடனடியாக அமைக்கவும், மணலுக்காக பதிவுசெய்யும்போதே, அதை ஏற்றிச்செல்லும் வாகனம் தொடர்பான தகவல்களைப் பதிவுசெய்வதை கட்டாயமாக்குவதற்குத் தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேணுகோபால், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு,  இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறையின் திருச்சி சரக திட்ட இயக்குநர் ஆகியோர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close