Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காய்ச்சலில் இறந்த பெண்ணின் உடலை சுமந்த உறவினர்கள்: மணப்பாறை அரசு மருத்துவமனை சோகம்

இறந்தவர்களின் உடலை சுமந்துசென்ற கொடூரம் இதுவரை வடமாநிலங்களில் மட்டும் நடந்துள்ளது. ஆனால், இப்போது தமிழகத்திலும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  பெண் ஒருவரின் உடலை, அவரது கணவரும் மகனும் சுமந்துசென்ற சம்பவம், திருச்சியை அடுத்துள்ள மணப்பாறையில் நடந்துள்ளது.

மணப்பாறை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ளது அயன்புதுப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி சின்னப்பொண்ணு என்பவர், கடந்த சிலநாள்களாகக் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். கடந்த 25-ம் தேதி, மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்தார். இதனால் அவரது  உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

சின்னப்பொண்ணுவின் உடலை சொந்த ஊரான அயன்புதுப்பட்டிக்குக் கொண்டுசெல்ல, மணப்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து இலவச அமரர் ஊர்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல மணி நேரமாக உடலை மருத்துவமனையில் வைத்துக் காத்திருந்தனர். 6 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதோ வருகிறது அதோ வருகிறது என மருத்துவமனை நிர்வாகத்தால் காத்திருக்க வைத்தனராம். சின்னப்பொண்ணுவின் உடலை, தனியார் ஆம்புலன்ஸ்மூலம் எடுத்துச்செல்ல முயற்சிகள் எடுத்தபோதும், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இறுதியில், 6 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த சின்னப்பொண்ணுவின் உறவினர்கள், கடுங்கோபத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதற்கு முன்பாக ஆம்புலன்ஸுக்காக மதியழகனும் அவரது உறவினர்களும் வாக்குவாதம் செய்ததால், இறந்த சின்னப்பொண்ணுவின் உடலை மருத்துவமனை ஊழியர்கள், கண்டுகொள்ளவில்லை. கூடவே, மருத்துவமனையிலிருந்து உடலை வெளியே எடுத்துச்செல்ல ஸ்டெச்சர் வழங்கவில்லை. இதனால் மனமுடைந்த சின்னப்பொண்ணுவின் கணவர் மதியழகன் மற்றும் மகன் சசிகுமார் இருவரும் உடலைக் கையில் சுமந்துவந்து ஆம்புலன்ஸில் ஏற்றி ஊருக்குக் கொண்டுசென்றனர். சம்பவம் அறிந்த பத்திரிகையாளர்கள், மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

இதுகுறித்து பேசிய மணப்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன்,  “காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பலியாகியிருப்பது பெருந்துயரம்.  அப்படிப்பட்ட சூழலில், அவர்களை 6 மணி நேரம் காத்திருக்கவைத்து, இறந்தவரின் உடலை அனுப்பிவைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல், மனிதநேயமே இல்லாமல் நடந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம்குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன், இதற்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close