Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தாஜ்மஹாலுக்கு மதச்சாயம் பூசுவது அடிப்படைவாதிகளின் அறிவற்ற செயல்!’ - சீறும் சீமான்

உலகின் தன்னிகரில்லா அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு மதச்சாயம் பூசுவது என்பது மதவெறியில் ஊறித்திளைத்திருக்கும் அடிப்படைவாதிகளின் அறிவற்றச் செயலாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

சீமான்

சுற்றுலாப் பட்டியலிலிருந்து தாஜ்மஹாலை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


”உத்தரப்பிரதேச மாநில அரசின் சுற்றுலாத்தலங்கள் குறித்த பட்டியலிலிருந்து தாஜ்மஹாலை நீக்கியிருக்கும் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசின் செயல் வன்மையானக் கண்டனத்துக்குரியதாகும். சாதி, மதம் போன்ற எல்லைகள் யாவற்றையும் கடந்து எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிற சுற்றுலாத்தலமாக விளங்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மதக்கண்ணோட்டத்தோடு அணுகி அவற்றின் மதிப்பைக் குலைக்கும்வகையில் ஆதித்யநாத் யோகி அரசு முன்னெடுத்துள்ள இச்செயலானது அப்பட்டமான மதவெறிப்போக்காகும்.

ஏற்கெனவே, உத்தரப்பிரதேச மாநில நிதிநிலை அறிக்கையில் கலாசாரப் பாரம்பரிய அடையாளங்களில் தாஜ்மஹால் குறிப்பிடப்படாது தவிர்க்கப்பட்டதும், வெளிநாட்டு தலைவர்களுக்குத் தாஜ்மஹால் உருவத்தைப் பரிசளிப்பது இந்திய பண்பாட்டின் அடையாளம் அல்ல என அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் யோகி வெளிப்படையாகப் பேசி வருவதும் தாஜ்மஹால் மீது அம்மாநில அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்வையும் வெறுப்புணர்ச்சியையும் வெளிக்காட்டுகிறது. தாஜ்மஹாலைச் சுற்றுலாத்தலங்கள் பட்டியலிலிருந்து நீக்கிய அம்மாநில பா.ஜ.க அரசு, முதல்வர் ஆதித்யநாத் யோகிக்குச் சொந்தமான கோரக்பூர் கோரக்கேஷ்வர் மடத்தை அப்பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் அவர்களின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளலாம்.


ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பு முகலாய மன்னர் ஷாஜகானால் அவர் மனைவி மும்தாஜுக்காக வெள்ளைநிறப் பளிங்குக்கற்கள் கொண்டு கட்டப்பட்டதுதான் தாஜ்மஹாலாகும். இது கட்டப்பட்டதற்குப் பிறகான காலகட்டத்தில் பல்வேறு மன்னர்களின் படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளபோதும் எந்த மன்னரும் இதன் சிறப்பைக் குலைக்கவோ முற்றாக இதை அழிக்கவோ முற்படவில்லை. உலகம் முழுக்க இருக்கும் மக்களால் காதல் சின்னமாகக் கொண்டாடப்படும் தாஜ்மஹாலை, உலகின் பாரம்பர்யச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து அதன் முக்கியத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறது. அத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த உலகின் தன்னிகரில்லா அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு மதச்சாயம் பூசுவது என்பது மதவெறியில் ஊறித்திளைத்திருக்கும் அடிப்படைவாதிகளின் அறிவற்றச் செயலாகும். 


மக்களிடையே மதவுணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களைத் துண்டாடும் இந்துத்துவா வாதிகள் தாஜ்மஹாலை இஸ்லாமிய மதச் சின்னமாகச் சுருக்குவதன் மூலம் தங்களது சனாதனதர்மத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள். ஷாஜகான் எனும் இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்பதற்காகவே தாஜ்மஹாலைப் புறந்தள்ளும் பா.ஜ.க அரசானது, அதே ஷாஜகானால் கட்டப்பட்ட டெல்லி செங்கோட்டையை மட்டும் இந்திய சுதந்திர விழா கொண்டாட்டத்துக்கு எதற்காகப் பயன்படுத்துகிறது? செங்கோட்டையில் நின்று ஆண்டுதோறும் வீரவுரை நிகழ்த்தும் பிரதமர் மோடியை இந்தியப் பாரம்பர்யத்தில் கட்டப்படாத செங்கோட்டையைப் புறக்கணிக்கக் கோருவாரா ஆதித்யநாத் யோகி. இஸ்லாமியரால் கட்டப்பட்டது என்பதற்காகவே கண்மூடித்தனமாகத் தாஜ்மஹாலை எதிர்க்கும் மத அடிப்படைவாதியான ஆதித்யநாத் யோகி, இஸ்லாமிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரி திரவங்களையும் புறக்கணிக்க எத்தனிப்பாரா, ஒவ்வொரு தேசிய இன மக்களும் தன்னாட்சி உரிமையைக் கோருகிறபோது அவர்களைப் பிரிவினைவாதிகள் எனப் பழிசுமத்தும் பா.ஜ.க-வின் தலைவர்கள், நாட்டையும் மக்களையும் மதத்தால் துண்டாட முற்படும் உத்தரப்பிரதேச முதல்வரின் மதவெறிப்போக்கை என்னவென்று கூறுவார்கள் என்று எழும் அடிப்படை கேள்விகளுக்கு அடிப்படைவாதிகளிடம் என்ன பதிலுண்டு?


டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டபோது, ‘நிர்பயா மரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து சுற்றுலாத்துறைக்கு வர வேண்டிய வருமானம் குறைந்துவிட்டது’ என்று நாட்டின் மானம் பறிபோனதைவிட வருமானம் குறைந்துவிட்டதையே பெருங்கவலையாக வெளிப்படுத்தினார் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி. இவ்வாறு சுற்றுலாத்துறை மீது அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அருண் ஜெட்லி போன்றவர்கள் இருக்கும் பா.ஜ.க எதற்காக உலகின் அரிய சுற்றுலாத்தலமாக இருக்கும் தாஜ்மஹாலைப் புறக்கணிக்க முற்படுகிறது. ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் தாஜ்மஹாலைப் பொலிவுபெறச் செய்யாது மலினப்படுத்துகிற வேலையை ஏன் செய்ய வேண்டும்?
தங்களது மதவெறி அரசியலுக்கும், இந்துத்துவாவின் வேர் பரப்பலுக்கும் தாஜ்மஹாலை இரையாக்க முயலும் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க அரசின் இச்செயலானது மதத்துவேசமும் பாசிசப்போக்கும் நிறைந்த மடமைத்தனமாகும். எனவே, உத்தரப்பிரதேச மாநில அரசின் மதவெறிப்போக்கை மத்திய அரசானது வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் எனவும், சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் தாஜ்மஹாலை இணைத்து புதிய பட்டியலை உத்தரப்பிரதேச அரசு உடனே வெளியிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close