Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷனும்... வழக்குகளும்!

ஜெயலலிதா

ட்சியையும், கட்சியையும் தனி ஒரு பெண்மணியாக அடக்கியாண்டவர் ஜெயலலிதா. ஆனால், அவருடைய மரணத்துக்குப் பிறகு... அவர் ஆளாக்கிக் கொடுத்த கட்சியும், ஆட்சியும் இன்று அவர்வழி வந்தவர்களால் சின்னாபின்னமாகியிருக்கிறது என்பதுதான் வேதனை என்கின்றனர் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள். ஜெ-வின் மரணத்துக்குப் பிறகு, அவருடைய மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இடையில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்துவிட, தற்போது அது ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் கூட்டணிக்குப் பிறகு பூதாகரமாய் வெடித்திருக்கிறது.

''ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்'' என்று எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாய் அறிவிப்பை வெளியிட, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணைக் கமிஷன் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 
''ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை'' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ''விசாரணைக் கமிஷன், மக்களுக்கு மிகப்பெரிய கண்துடைப்பாகத்தான் இருக்கும்'' என்று நடிகர் ஆனந்தராஜும் விசாரணைக் கமிஷன் அறிவிப்பின்போதே குற்றம்சாட்டியிருந்தனர். 

'கமிஷனின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ள நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அ.தி.மு.க-வினர் பலரும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டனர். அந்தச் சமயத்தில், ''அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையில் அம்மாவைப் (ஜெ.வை) பார்த்தோம்'' என்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், இப்போது அதே அமைச்சர், ''அம்மாவை மருத்துவமனையில் நாங்கள் யாரும் பார்க்கவேயில்லை. நாங்கள் சொன்னது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று பல்டி அடிக்கிறார். இதற்குப் பதில் சொல்லும் விதமாக அமைச்சர் செல்லூர் ராஜோ, ''நாங்கள் எல்லோருமே அம்மாவைப் பார்த்தோம்'' என்றார். அதேபோல், எம்.எல்.ஏ. ஏ.கே.போஸும்,  ''அம்மா, என்னைப் பார்த்து கையசைத்து வாழ்த்தினார்'' என்றார். இதையடுத்து, ''ஜெ-வின் மரணம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் வேளையில், அமைச்சர்களும், எம்.எல்.ஏ-வும் இப்படி ஆளுக்கொரு கருத்துகளைச் சொல்வதால் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக விசாரணைக் கமிஷன் அறிக்கை இருக்க வேண்டும்'' என்று அ.தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசலைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் இருந்துவருகிறது. அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து எந்தத் தெளிவான விடையும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், 'ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிமூலம் நீதி விசாரணை நடத்தப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருந்தபோதிலும், நீதி விசாரணையைத் தொடங்கவில்லை. நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஜெயலலிதாவின் மரணம் குறித்துப் பேசினர். இதுபோன்று பேசுவதால் நீதி விசாரணை நேரடியாகவோ, மறைமுகமாவோ பாதிக்கும். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.ஜெயலலிதா மரணத்தில் உண்மையைக் கண்டறிய நீதி விசாரணையை உடனடியாகத் தொடங்க உத்தரவிட வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமி‌ஷனை அரசு அமைத்துள்ளதாகவும், அந்தக் கமி‌ஷன் தனது பணியைத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்து அது தொடர்பான அரசாணையைத் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்பின்பு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ''ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கோரிக்கைவிடுத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘'பேச்சு உரிமை என்பது அடிப்படை உரிமை. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்கள் பேசுவதற்குத் தடை விதிக்க முடியாது. மனுதாரரின் இந்தக் கோரிக்கைமீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது'’ என்று உத்தரவிட்டனர். 

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித்  தலைவர்கள்  கோரிக்கைவிடுத்து வருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக... முன்பு, 'விசாரணை ஆணையம் தேவையில்லை' என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த தமிழக அரசு, தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. இதுபற்றி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே விசாரணை ஆணைய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நடைமுறையைத் தமிழக அரசு பின்பற்றவில்லை. ஆகவே இதை ரத்து செய்யவேண்டும்'' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ''விசாரணை ஆணையத்தின், விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை'' என்று தெரிவித்த நீதிபதி, அந்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

ஜெ. மரணம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைக் கமிஷன் அமைத்தபிறகும், அதுதொடர்பான வழக்குகளுக்கும், விவகாரங்களுக்கும் பஞ்சமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close