Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லையில் பரவும் டெங்கு: ஒரே நாளில் இரு குழந்தைகள் பலியான சோகம்!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மர்மக் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் இரு குழந்தைகள் பலியான சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலை தூக்கிய டெங்குக் காய்ச்சலை மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடைபெற்றது. அதனால் ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், மீண்டும் மாவட்டம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கையில் முறைகேடுகள் நடப்பதால், காய்ச்சலை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலவில்லை என்கிற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. 

இந்நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட புதுமனை 5-வது தெருவில் குடியிருக்கும் அபுல் ஹாசன் என்பவரது 3 வயது மகள் பாத்திமா ஆரிபா கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். தென்காசி பகுதியில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் குடியிருக்கும் பால்ராஜ் என்ற கூலித்தொழிலாளியின் 4 வயது மகள் சரஸ்வதி கடந்த மூன்று தினங்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்குக் காய்ச்சல் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த வாரத்தில் சங்கரன்கோவில் அருகே தலைவன்கோட்டையில் சுகிதா என்ற சிறுமியும், ஆலங்குளத்தில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவியும் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 10-க்கும் அதிகமானோர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் காரணமாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.  

பள்ளிகளின் மூலமாகக் குழந்தைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதால் பெற்றோர் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பவே பெற்றோர் தயக்கம் காட்டும் சூழல் உருவாகியிருக்கிறது. குறிப்பாக பாலர் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாகக் குறைந்து வருகிறது. சில பள்ளிகளின் அருகில் தண்ணீர், சாக்கடை தேங்கிக் கிடப்பதால் நோய் பரவும் ஆபத்து உள்ளது. அவற்றை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close