Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’கன்னிமாரா நூலகத்தின் செயல்பாடுகள் மிகுந்த கவலையளிக்கிறது’ - திருநாவுக்கரசர் வருத்தம்

தமிழகத்தில் நூலகத் துறையிலுள்ள இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவிலேயே நூலகத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்த பெருமை உண்டு. நூலகத் தந்தை என்று அழைக்கப்பட்ட எஸ்.ரங்கநாதன் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாகத் தமிழகம் முழுவதும் நூலகக் கிளைகள் பெருமளவில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டது. அத்தகைய நூலகத்துறை சில ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு செயலற்றுக் கிடக்கின்றன. தமிழகப் பொது நூலகத்துறை இயக்குநர் நியமனம் குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர் நீதிமன்றம், ‘பத்தாண்டுகள் நூலக அனுபவமும், நூலகவியலில் பட்ட மேற்படிப்புப் பட்டமும் பெற்றவர்தான் நியமிக்கப்பட வேண்டுமென தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி இதுநாள் வரை இயக்குநர் பதவி நிரப்பப்படவில்லை. பள்ளி கல்வித்துறை இயக்குநர்களின் திரைமறைவு செயல்பாடுகளினால் இப்பதவி நிரப்பப்படாமல் உள்ளது. 

தமிழ்நாட்டில் பொதுமக்கள் ஆண்டுதோறும் ரூபாய் 200 கோடிக்கு மேல் நூலக வரி செலுத்தி வருகிறார்கள். சுமார் 4500 கிளை நூலகங்கள் போதிய அடிப்படை வசதிகளும், நூலகர்களும் இல்லாமல் பெயளரவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கின்றன. நூலகத்துறையை பள்ளி கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு செயல்படவிடாமல் தடுத்து வருகிறார்கள். சர்வதேசப் புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தின் செயல்பாடுகள் மிகுந்த கவலையைத் தந்து வருகின்றன. அந்நூலகத்தில் மொத்தமுள்ள 112 பணியிடங்களில் 23 இடங்களில் தான் பணியாளர்கள் செயலாற்றி வருகிறார்கள். மீதிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்பட வேண்டிய கன்னிமாரா நூலகம் செயலற்று முடங்கி கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 

தமிழகத்தில் ஊர்ப்புற நூலகர்கள் 1800 பேர் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்கள். ஊர்ப்புற நூலகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பலர் நகர்ப்புறங்களில் பணியாற்றி வருகிறார்கள். ஊர்ப்புற நூலகர்கள் அனைவரையும் முறையான ஊதிய ஏற்ற முறையில் பணியாணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இக்கோரிக்கை குறித்து ஆட்சியாளர்கள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறார்கள். மிகுந்த சிரமத்துக்கு இடையில் பணியாற்றி வருகிற ஊர்ப்புற நூலகர்களை நூலக நிலை-4 என்கிற அடிப்படையில் பணியாணை வழங்கி நிரந்தரமாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு ஆண்டுதோறும் புத்தகங்கள் வாங்குகிற நடைமுறை 2014, 2016, 2017-ம் ஆண்டுகளில் பின்பற்றப்படவில்லை. 2015-ம் ஆண்டில் ஆதாயத்தின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் புத்தகங்களுக்கான கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையின் மூலமாக தரமற்ற நூல்கள் வாங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நல்ல குடிமக்களை உருவாக்குகிற நூலகங்களுக்குத் தரமான நூல்களை வெளிப்படைத்தன்மையுடன் வாங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை நூலகத்துறை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close