Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுப் பள்ளிக் குழந்தைகள் தயாரித்த பசுமைப் பேனா!

சேலத்தில் வரும் 28 -ம் தேதி நடைபெறும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கும் விதத்தில் பசுமை  பேனாவைத் தயாரித்து இருக்கிறார்கள். இந்தப் பசுமை பேனா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.  

இதுபற்றி புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 8 -ம் வகுப்பு மாணவி ஜோதிபிரியா,  ''தற்போது சுற்றுச் சூழல் மாசுபடுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளாகிய நாங்களும் தினம்தோறும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவது வருத்தமாக இருந்தது. அதனால் சுற்றுச்சுழலைப் பேணும் வகையில் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குச்  சுற்றுச்சூழலை வலியுறுத்தி ஏதாவது செய்து எங்களைப் போன்ற குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று கருதினோம். அந்த முயற்சியில் உருவானதுதான் இந்தப் பசுமைப் பேனா.

நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருள்களையும் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துகிறோம். ஆனால், மை பேனாக்கள், ஹெச் பென்சில்கள் ஒரு முறை பயன்படுத்தினால் தூக்கி வீசி விடுகிறோம். இவை மண்ணில் மக்காமல் கிடப்பதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதோடு மண்ணின் வளமும் கெட்டு விடுகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி விட்டு வீசப்படும் பேனாக்கள் ஒரு வருடத்துக்கு 159 டன் வேஸ்டேஜ் ஆக இந்த மண்ணில் விழுந்து மண்ணை மலடாக்குகிறது.

இந்த வேஸ்டேஜ் பேனாக்களைத் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்று நான், சங்கீதா, தனுஷ், தமிழ்ச்செல்வி, யோகநாராயணன் ஆகியோர் முடிவெடுத்து எங்களுடைய  சிந்தனைகளை எங்கள் ஆசிரியர்கள் தினேஷ் மற்றும் ரஞ்சனாதேவி மேடமிடமும் சொன்னோம். அப்போது தினேஷ் சார் எங்களுக்கு நல்ல ஆலோசனை கொடுத்ததோடு கேரளாவில் விதைப் பேனா என்று உருவாக்கி இருக்கிறார்கள் என்று கூறியதோடு அந்த விதைப் பேனாவை வாங்கி வந்து எங்களிடம் காண்பித்தார். அந்தப் பேனாவை நாங்கள் பார்த்தோம். அதில் வெறும் மைக் குச்சியின் மேல் பேப்பர் ரோல் சுற்றப்பட்டு பேனாவின் மூடியில் விதை வைத்திருந்தார்கள்.

இதைவிட சிறப்பாகச் செய்யலாம் என்று தினேஷ் சாரிடம் ஆலோசனை பெற்று வாழை இழைகளை ரோல் பண்ணி மைதாவால் ஒட்டி ஒரு குழல் போல உருவாக்கி ஒரு முனையில் பேனாவின் முனையைச் சொருகி மறுமுனையில் இங்க் ஊற்றி மைதாவுக்குள் வேப்பம் விதை, அரசம்  விதை, புங்கன் விதை என ஏதாவது ஒரு மரத்தின் விதையை வைத்து இங்க் ஊற்றப்பட்ட முனையை அடைத்து பசுமைப் பேனாவை உருவாக்கினோம்.

ஒரு பேனாவை உருவாக்க 12 ரூபாய் ஆகிறது. ஒரு பேனாவில் 5 முறை இங்க் நிரப்பி 25 நாள்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்தியப் பிறகு அந்த பேனாவை தூக்கி வீசி விட்டீர்கள் என்றால் அந்த பேனா வீசப்பட்ட இடத்தில் உங்கள் பெயரைச் சொல்லும் அளவுக்கு அற்புதமான ஆல மரமோ, அரச மரமோ வளர்ந்து சுற்றுச் சூழலைப் பேணும்'' என்றார்.


இதுபற்றி ஆசிரியர் தினேஷிடம் கேட்டதற்கு, ''இந்த பசுமைப் பேனா முழுக்க முழுக்க ஜோதிபிரியா, சங்கீதா, தனுஷ், தமிழ்செல்வி, யோகநாராயணன் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினார்கள். மாற்றுத் திறனாளியான யோகநாராயணன் பங்கேற்று இருக்கிறார். அவர்களுக்குச் சில ஆலோசனைகளை மட்டுமே நான் கொடுத்தேன். இயற்கை ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் பள்ளிக் குழந்தைகளிடமும் இந்த பசுமை பேனாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. வரும் 28-ம் தேதி தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்த பேனாவை அறிமுகம் செய்யவிருக்கிறோம். அதன்பிறகு எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் பசுமைப் பேனாவைப் பயன்படுத்த குறைந்த செலவில் கொடுக்கவிருக்கிறோம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close