Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஏழைங்க அப்போலோவுக்கு போக முடியுமா சார்!' - திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில், டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து பலியாவதால் பதற்றம் நிலவுகிறது.  அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

திருச்சி அரசு மருத்துவமனைதிருச்சி, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் 4 வயது மகள் இனியா, இரண்டு நாள்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டார். அதனால் அவரை நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் கொண்டுவந்து சேர்த்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். அதனால் கோபமடைந்த அவரின் உறவினர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால், பலர் இறந்துபோவதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் திருச்சி அரசு மருத்துவமனையில் குடிக்கக்கூட தண்ணீர் வசதியில்லை என்பது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

அப்போது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு போலீஸார் செய்வதறியாமல் திகைத்தனர். அப்போது, அரசு மருத்துவமனையின் முதல்வர் அனிதா வந்து, இதுகுறித்து விளக்கம் தந்தால்தான் கலைந்துசெல்வோம் என முழங்கினார்கள். அப்போது அங்கு வந்த போலீஸார், மருத்துவர் கருணாகரனை அழைத்துவந்து, மக்களிடம் பேசவைத்தனர். அந்த மருத்துவ அதிகாரியிடம், 'ஏழைங்க நாங்க அப்பலோவுல சிகிச்சை எடுத்துக்க முடியுமா? அரசு மருத்துவமனைக்குத்தான் வரமுடியும். இங்கயே சிகிச்சை இல்லை என்றால், நாங்கள் எங்கே போவோம்' எனக் கேள்வி எழுப்பினர். அதைக் கேட்டுத் திணறிய மருத்துவர்,  'மருத்துவமனையிலுள்ள பிரச்னைகளை மெள்ள மெள்ளச் சரிசெய்கிறோம்' என்று உறுதியளித்ததையடுத்து, அங்கிருந்து மக்கள் கலைந்துசென்றனர்.

 

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லாத நிலமையும் நீடிக்கிறது. மேலும், திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 277 பேர் சிகிச்சைபெற்று வருவதாகவும், இதில் 10 பேருக்கு டெங்குக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நேற்று இரவு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கரூர் மணவாசியைச் சேர்ந்த பூஜா, என்ற நான்கு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால், தன் குழந்தை இறந்தது எனக் கூறி, தன் உறவினர்களுடன் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதேபோல, திருச்சி, மேல சிந்தாமணியைச் சேர்ந்த நரேன் தேவ் என்னும் 5 வயது சிறுவன் டெங்குக் காய்ச்சலால் பலியானதாகத் தகவல் வெளியாக, திருச்சி மக்களிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close