Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சினிமா டிக்கெட் விலை 25% வரை உயர்த்தலாம்- தமிழக அரசு அனுமதி

சினிமா டிக்கெட் விலையை 25 சதவிகிதம் வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி அமலாக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக திரைத்துறைக்குக் கூடுதலாக 10 சதவிகிதம் கேளிக்கை வரி தமிழகத்தில் விதிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதி முதல், இந்தக் கூடுதல் வரிவிதிப்புமுறை அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்தது. அரசின் கூடுதல் கேளிக்கை வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து கூட்டாக அறிவித்தன.  

இந்த நிலையில், தமிழகத்தில் திரைப்பட டிக்கெட் கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னை மாநகரில் உள்ள மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.160 வசூலிக்கலாம் என்றும், மற்ற மாநகரங்களில் உள்ள மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.140 வரை வசூலிக்கலாம் என்றும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாநகராட்சிகளில் உள்ள குளிர்சாதன வசதிகொண்ட திரையரங்குகளில், அதிகபட்சமாக ரூ.50-ம், நகராட்சிகளில் உள்ள ஏ.சி. திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.40-ம் வசூலித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகளில் உள்ள ஏ.சி வசதி இல்லாத திரையரங்குகளில், அதிகபட்சமாக ரூ.20 கட்டணம் வசூலிக்கலாம் என்றும், ஊராட்சிகளில் உள்ள ஏ.சி இல்லாத திரையரங்குகளில், அதிகபட்சமாக ரூ.15 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று, திரையரங்கக் கட்டணத்தை அதிகரித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு, திங்கட்கிழமை முதல் அமலுக்குவருகிறது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close