Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அம்பேத்கர் கூறியபடி இந்து மதத்திலிருந்து வெளியேறினால்தான் சாதி இழிவு நீங்கும்!'' - கிருஷ்ணசாமிக்குத் திருமாவளவன் பதில்

krishnaswamy

Chennai: 

'தேவேந்திர குல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து விடுவித்து, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 6ஆம் தேதி சென்னையில் மாநாடு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் 'புதிய தமிழகம் கட்சி'த் தலைவர் கிருஷ்ணசாமி!

பிற்படுத்தப்பட்ட இன மக்களே, இட ஒதுக்கீடு பெறவேண்டி தங்கள் சமூகத்தை தாழ்த்தப்பட்ட சமூகமாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடத்திவரும் வேளையில், புதிய தமிழகத்தின் கோரிக்கை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, தமிழக அரசியல் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களிடம் புதிய தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்டோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் இங்கே....

puthiya tamizhagam maanadu

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்)

''அதிகாரப் பகிர்வுக்கான ஓர் அடையாளம்தான் ரிசர்வேஷன்; இட ஒதுக்கீடல் அல்லது இடப்பங்கீடு என்பது. எனவே, அதை அதிகாரப் பகிர்வாகக் கருதினால், நமக்கு இழிவாகத் தோன்றாது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு. இவர்கள் எல்லாம் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டவர்கள். நிலம் அற்றவர்களாக, அதிகாரம் அற்றவர்களாக, கல்வி அற்றவர்களாக தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டவர்கள். அதனால், அவர்கள் மறுபடியும் நிலம் பெற வேண்டும், அதிகாரம் பெற வேண்டும், கல்வி பெற வேண்டும் என்கிற அடிப்படையில் வழங்கப்படுகிற ஒரு முன்னுரிமைதான் இட ஒதுக்கீடு. இதை ஏன் நாம் இழிவாகப் பார்க்கவேண்டும்? இதை எந்தப் பட்டியலில் வைத்திருந்தாலும் மேம்படுத்தப்பட்ட சாதியினர் அல்லது உயர் சாதியினர் என்று யாரும் சொல்லப்போவதில்லை. பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்தாலும் இட ஒதுக்கீடுதான். பிற்படுத்தப்பட்ட சாதியிலேயே நூற்றுக்கணக்கான சாதிகள் இருக்கின்றன. அதில் எந்த இடத்தில் நம்மை வைக்கப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆக நமக்கு மேல் இன்னும் பல நூறு சாதிகள் இருக்கின்றன என்பதுதான் யதார்த்தம். எனவே எந்த பட்டியலுக்குள் போனாலும் சாதி என்றால் இழிவுதான். இப்படிச் சாதிகள் இருப்பதுதான் இழிவு என்று நாம் புரிந்துகொள்ளவேண்டுமே தவிர... சாதியை இழக்காமல், மேம்பட்டுவிட முடியும் என்று கருதுவது ஓர் அரசியல் புரிதல் என்று கருதமுடியாது.

'சாதியால் உள்ள இழிவைத் துடைத்தெறிய இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும்' என்று அம்பேத்கர் சொன்னார். ஆனால், 'சாதியின் பெயரால் உள்ள இழிவைத் துடைக்க, 'தாழ்த்தப்பட்டோர் என்ற பட்டியலில் இருந்தே வெளியேற வேண்டும்' என்று கிருஷ்ணசாமி கூறுவது முரணாக இருக்கிறது. 'இந்து மதத்திலிருந்து வெளியேறுவோம்' என்று அவர் சொன்னால், அம்பேத்கரியத்தைப் பின்பற்றுவது என்பதையும் தாண்டி அடிப்படையிலேயே சரியானது; பொருத்தமானது.''

puthiya thamizhagam maanadu

ஜான் பாண்டியன், (தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர்)

''புதிய தமிழகம் என்ற பெயரில் கிருஷ்ணசாமி நடத்துகிற கட்சி சார்பிலான மாநாடுதான் அது. அதற்கும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

இத்தனை ஆண்டுகாலமும் தன்னை தலித் என்றே அடையாளப்படுத்திக்கொண்ட கிருஷ்ணசாமி சமீபகாலமாகத்தான் தேவேந்திர குல வேளாளர் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நிறைய உட்பிரிவு சாதிகளை உள்ளடக்கிய இந்த 'தேவேந்திர குல வேளாளர்' என்ற பெயரையே 1974-ல் நான்தான் முதன்முதலில் அறிவித்தேன். தேவேந்திர குலம் என்ற பெயர் அட்டவணையிலேயே இருக்கிறது.  

தேவேந்திர குல வேளாளர் சமூகம் ஒருகாலத்தில் கோலோச்சிய சமூகம்; ஆனால், எங்களை எஸ்.சி பட்டியலில் தள்ளி அடையாளத்தை அழித்துவிட்டார்கள் என்றெல்லாம் இப்போது சொல்லிவருகிறார். இதெல்லாம் எந்த வரலாற்றில் இருக்கிறது? அதற்கான ஆதாரம் என்ன என்பதையெல்லாம் அவர் பட்டியல் இடவில்லையே. 1995-ல் அவர் அரசியலுக்குள் வந்தபோதே இந்த விவரம் தெரியவில்லையா? இந்த உண்மையைக் கண்டுபிடிக்க இத்தனை ஆண்டுகாலம் தேவைப்பட்டதா? பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணசாமி.'' 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close