Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயர்மட்ட பாலத்தை திறந்துவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடங்கவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஜெயலலிதா இருக்கின்ற காலத்திலேயே இங்கே இருக்கின்ற பொதுமக்கள், கழக நிர்வாகிகள் எல்லாம், நஞ்சுண்டீஸ்வரர் திருக்கோயிலினுடைய ஆலயத்துக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டிக் கொடுத்தால், இப்பகுதி மக்களின் திருமண நிகழ்ச்சி நடக்கின்றபொழுது, இந்த மண்டபம் மிகுந்த பயனளிக்கும் என்று கோரிக்கை வைத்தார்கள்.  

புரட்சித்தலைவி அம்மாவிடத்திலே நான் இதைச் சொன்னவுடன், 2015-2016-ம் ஆண்டே இதற்கு நிதி ஒதுக்கித் தந்தார்கள்.  ஆனால், இந்த நிதி ஒதுக்கீடு போதாது, பெரிய மண்டபமாக கட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்து,  இது பரிசீலனையில் இருந்துகொண்டிருந்தது. இப்பொழுது இந்த மண்டபத்துக்காக, தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சார்பாக 2.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. எடப்பாடி நகரமே ஒரு மாற்றத்தை கண்டிருக்கின்றது.  2011-க்கு முன்பு, எடப்பாடி நகரம் எப்படி இருந்தது, 2011-க்குப் பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எப்படி எடப்பாடி நகரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.  

நான் 2011 தேர்தலில், வீடுவீடாக எடப்பாடி மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும்பொழுது அவர்கள் வைத்த கோரிக்கைகள் குடிநீர் பிரச்னை, வெள்ளாண்டிவலசு போகும்பொழுது, அங்கு இருக்கின்ற ஒரு தாய்மார் ஒரு பாட்டில் எடுத்து வந்து தண்ணீர் பிடித்து சுமாராகத்தான் தண்ணீர் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  நீங்கள் வந்தவுடனேயே அம்மா அவர்களிடம் எடுத்துச் சொல்லி எங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று கோரிக்கைவைத்தார். அந்தக் கோரிக்கையை அப்படியே  அம்மாவிடத்தில் சொன்னவுடனே, 20 கோடி ரூபாய் கொடுத்து, எடப்பாடி நகர மக்களுக்கு தனியாக குழாய் மூலமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அளித்திருக்கிறோம்.  

இதெல்லாம் எந்த ஆட்சியிலும் செய்ய முடியாத சாதனை, இன்றைக்கு அம்மாவினுடைய அரசு செய்து கொடுத்திருக்கின்றது. வெள்ளாண்டிவலசு மற்றும் கண்டம்பட்டிக்கு இடையே பாலம் வேண்டுமென்று கேட்டீர்கள், அந்த பாலத்தையும் அம்மா கட்டிக் கொடுத்தார்கள்.  புதிதாக கண்டம்பட்டியிலிருந்து டவுனுக்குச்  செல்ல ஒரு பாலம் கேட்டீர்கள்.  அதற்கும் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, அப்பணி விரைந்து துவக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு டிரைனேஜ் வசதி கேட்டீர்கள், அதையும் அம்மா செய்து கொடுத்தார்கள். ரேஷன் கடையை  கேட்டீர்கள், அதையும் அம்மா கொடுத்தார்கள்.  

கூடுதல் பள்ளிக் கட்டடம் வேண்டுமென்று கேட்டார்கள், அதையும் கொடுத்தார்கள்.  கல்லூரி வேண்டுமென்று பல்லாண்டு காலமாக கோரிக்கை வைத்தீர்கள்.  அம்மா அவர்கள் இருக்கின்ற காலத்திலேயே 2011லேயே அருமையான கல்லூரி கொடுத்து, அற்புதமான கட்டடத்தை கொடுத்து, இன்றைக்கு 1,100 பேர் படிக்கிறார்கள்.  இப்பொழுது எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருக்கின்ற மாணவ மாணவிகள், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் இருக்கின்ற மாணவ மாணவிகள் எல்லாம் உயர்கல்வி படிக்கவேண்டுமென்பதற்காக இன்றைக்கு வனவாசி பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

பழனிசாமி திறந்துவைத்த பாலம், 30.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிபாளையம்-ஈரோட்டை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. 430 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட பாலத்தில் 16 தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close