Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா!

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா

பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோதத் திருவிழா கமுதி அருகே சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இந்தக் கிராமத்திலுள்ள புதுக்குளம் கண்மாய்க் கரையில் கிராம எல்லையைக் காக்கும் தெய்வமான முதல்நாடு முப்பிடாதி அம்மனுக்கு கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகில் பெண் ஒருவரின் நினைவாக அமைந்துள்ள பீடத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடும் விநோதத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் 5 சகோதரர்களுடன் பிறந்த பெண் ஒருவரை அவரின் அண்ணியார்கள் துன்புறுத்தியுள்ளனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய அந்தப் பெண் ஊர் எல்லையைக் காக்கும் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே வந்தபோது மாயமானதாகவும், பின்னர் அக்கிராம மக்களின் கனவில் தோன்றிய அந்தப் பெண் ''நான் இந்த இடத்தில் தெய்வமாக இருந்து ஊரைக் காப்பாற்றுவேன். ஆண்டுக்கு ஒரு முறை எனக்கு கிடா வெட்டி படையலிட்டு ஆண்கள் மட்டுமே வந்து வழிபட வேண்டும். பெண்கள் அந்த நேரத்தில் இங்கு வரவேக் கூடாது'' எனக் கூறியதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடந்துவருகிறது. 

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான பெளர்ணமி தினத்தன்று இரவில் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்ட பீடத்துக்கு ஆண்கள் ஒன்றுகூடி கைகுத்தல் பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தையும், 50 கிடாய்களைப் பலியிட்டும் படையல் வைத்தனர். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இங்கு படையல் இட்ட உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதால் மீதமாகியிருந்த உணவு அப்பகுதியிலேயே மண்ணில் புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விநோதத் திருவிழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close